மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் இந்து அறநிலையத் துறை சார்பில் கோயில் யானைகள், மடத்தில் உள்ள யானைகளுக்கான 12ஆவது புத்துணர்வு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது.
ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்துணர்வு முகாமில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 28 யானைகள் பங்கேற்றுள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை முகாமில் பங்கேற்கும் யானைகள், சக யானைகளைப் பார்த்து உற்சாகம் அடைகின்றன.
முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் சிலம்பு சுற்றுவது, மவுத் ஆர்கன் வாசிப்பது என பல்வேறு வித்தைகளை செய்து வருகிறது. இதில், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் யானை கோமதி, முகாமுக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
ஃபுட் பால் விளையாடும் கோமதி
25 வயதான கோமதி புட்பால் விளையாடுவது, மவுத் ஆர்கன் வாசிப்பது என படு சுட்டியாக உள்ளது. மோமதியின் நடைபாவனை அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. இதுகுறித்து கோமதி யானையின் பாகன் சனல் குமார் கூறுகையில், ' இந்த கோமதி யானையை ஊர் மக்கள் அனைவரும் நடை அழகி என அன்பாக அழைப்பார்கள். மவுத் ஆர்கன் வாசிப்பது, ஃபுட்பால் விளையாடுவது போன்றவற்றை இயல்பாக கற்றுக்கொண்டது. இதுவரை யாருக்கும் எந்த ஒரு தொந்தரவும் கொடுத்ததில்லை' என்று கோமதியின் சேட்டைகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.