கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த சாமிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். பட்டதாரியான இவரது மகள் கவிதா பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றிவந்துள்ளார்.
கவிதா கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் நாய் ஒன்றை செல்லமாக வளர்த்துவந்துள்ளார். இந்த நாய் இரவு நேரத்தில் குரைப்பதால் அருகில் வசிப்பவர்கள் தங்களுக்குத் தொந்தரவாக இருப்பதாக இவரது தந்தை பெருமாளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த நாயை வேறு ஒருவருக்கு கொடுக்க பெருமாள் முடிவுசெய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு கவிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் பெருமாள் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் செல்லமாக வளர்த்த நாய் தன்னை விட்டு பிரியப்போகிறது என்பதை நினைத்து மனம் உடைந்த கவிதா கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்லமாக வளர்த்துவந்த நாயை பிரிய முடியாமல் பட்டதாரி இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது கவிதாவின் உறவினர்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.