கோவை:கருமத்தம்பட்டி அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ராமசாமி என்பவரது இடத்தில் ராட்சத பேனர்கள் வைக்கும் பணி நேற்று மாலை நடைபெற்றது. இந்த பணியை சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த சேர்ந்த 7 தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர்.
பணியின் போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாரம் சரிந்து விழ தொடங்கியது. இந்நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த அனைவரும் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள கீழே இறங்கி தப்பிக்க முயன்றனர். அப்பொழுது பேனர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் குணசேகரன்(52), செந்தில் குமார் என்கின்ற செந்தில் முருகன் (38), குமார்(51) என்ற 3 தொழிலாளர்கள் கீழே இறங்குவதற்கு முன்னரே பேனர் சாய்ந்ததில் சாரத்தின் அடியே சிக்கி சம்பவ இடத்திலேயே மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் பேனர்களை அகற்றி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஜ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அலட்சியமாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் நால்வர் மீது வழக்கு பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீசார், சப் காண்ட்ராக்டர் பழனிசாமி மற்றும் மேலாளர் அருண் ஆகியோரை கைது செய்தனர். அதே போல தலைமறைவாக உள்ள ராட்சத பேனர் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் உரிமையாளர் ராமசாமி மற்றும் காண்ட்ராக்டர் பாலாஜி ஆகியோரை தேடி வருகின்றனர்.
இதனிடையே கோவை மாவட்ட நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், “கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சாலைகள், மாநில நெடுஞ்சாலை சாலைகள், மாநாகராட்சி சாலைகள், உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமான சாலைகள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் / டிஜிட்டல் பேனர்கள் / பிளக்ஸ் போர்டுகள்/ கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றுவது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதில், கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 அனுமதியற்ற விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.