கோயம்புத்தூர்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "விரக்தியின் உச்சிக்குச் சென்றுள்ள சீமான், தமிழில் கூறும் 'ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்த மாமியார் ஒரு நாட்டில் மனிதனைக் கடித்தாள்' என்ற பழமொழி போல தற்போது அரை நாள், ஒரு மணி நேரம் ஆட்சியைக் கொடுங்கள் என்று மக்களிடையே கெஞ்சிக் கொண்டிருந்த சீமான் தனக்கு வாக்களிக்காத எல்லோருமே சைத்தானின் பிள்ளைகள் என உலரத் தொடங்கி இருக்கின்றார்.
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் சைத்தானின் பிள்ளைகள் என சீமான் விரக்தியின் உச்சியில் பேசியிருக்கிறார். அதற்குக் காரணமாக தனக்கு வாக்களிக்காமல், திராவிட கழகங்களான திமுகவிற்கும், அதிமுகவிற்கும் வாக்களித்தவர் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இந்த 18 சதவிகிதத்தால் தான் திமுக ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததால் தான் விலைவாசி உயர்ந்துள்ளது. வேலை இல்லா திண்டாட்டம் உள்ளது என்ற ஒரு புதுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார். சீமான் கட்சியைத் துவக்கிய காலத்தில் அதிமுகவை ஆதரித்தவர். 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என ஊர் ஊராகச் சென்று பேசியவர் இவர்.
அப்போது அதிமுகவிற்கு வாக்கு கேட்ட சீமான் யாருடைய பிள்ளை? அப்படித்தான் நமக்கு நினைக்கத் தோன்றும். சீமான் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமானின் பேச்சுக்கள், உடல் அசைவுகளைப் பார்த்து ஏமாந்து கொண்டிருக்கிற தமிழக இளைஞர்களே... இப்படி ஒரு மனநிலை பாதித்தவரை தலைவராக வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டைச் சீரழிக்க வேண்டுமா? புரிந்து கொள்ளுங்கள்.
சீமானின் தம்பிகளே புரிந்து கொள்ளுங்கள், தனக்கு வாக்களிக்காத மக்களைச் சைத்தானின் பிள்ளைகள் என கூறும் சீமான் அடுத்து உங்கள் மீதும் பாய்வார் எச்சரிக்கையாக இருங்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் இதுவரை நடைப் பயணத்தில் தான் ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என ஒரு தவறான கணக்குப் போட்டு நடக்கத் துவங்கியுள்ளார். ஆனால், நடந்த தலைவர்கள் எல்லாம் தொடர்ந்து இடைவிடாமல் இரவு பகல் பாராமல் நடந்தார்கள்.
அவர்களெல்லாம் கிராமத்திற்குச் சென்றாலும் கிராமத்தில் இருக்கக்கூடிய தொண்டர்களின் இல்லங்களில் தங்கித் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அண்ணாமலை ஒரு நாளைக்கு நீரிழிவு நோயாளிகள் நடப்பது போல இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை தான் நடக்கிறார்.