கோவை: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் வட மாநில நபர்கள் மூலமாக கஞ்சா சாக்லேட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நேற்று (பிப்.6) உதவி காவல் ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகம் அளிக்கும் வகையில் வந்த ஒரு நபரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையை வாங்கி போலீசார் சோதனை செய்தனர். அதில் சாக்லேட் பாக்கெட்டுகளும் ஒரு பொட்டலமும் இருந்தது. அதை போலீசார் பிரித்துப் பார்த்தபோது, இரண்டரை கிலோ அளவுள்ள கஞ்சா கலந்த போதை சாக்லேட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்டவர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் சஹான் என்பவரின் மகன் மகேஷ் குமார்(37) என்பதும், பீகார் மாநிலத்தில் இருந்து கஞ்சா சாக்லேட் மொத்தமாக வாங்கி வந்து இப்பகுதியில் பணி புரியும் வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வருவதும் \ தெரிய வந்தது.