கோயம்புத்தூர்: 'வீ வண்டர் வுமன்' அமைப்பு (We Wonder Women) மற்றும் கற்பகம் அகாடமி (Karpagam Academy Of Higher Education) இணைந்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் சம உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தும் 'ஃப்ரீடம் ரன்' (Freedom Run) எனும் விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியின் 3ம் பதிப்பு நீலாம்பூர் பகுதியில் உள்ள டெகத்தலான் வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 27) நடைபெற்றது.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வையும் பெண்களுக்கு தேவையான எல்லா வகையான பாதுகாப்பை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்பதை கூறிடும் நோக்கில் இந்த 'ஃப்ரீடம் ரன்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த 5 கிலோ மீட்டர் விழிப்புணர்வு ஓட்டம் டெகத்தலான் வளாகத்தில் துவங்கி அவினாசி சாலை வழியே சென்று மீண்டும் டெகத்தலான் வளாகத்தில் முடிவடையும் படி அமைக்கப்பட்டு இருந்தது. இதனை கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
அதன் பின்னர் ஜூம்பா, ஏரோபிக்ஸ் போன்ற உடற்பயிற்சிகளும் டி.ஜே. இசையுடன் நடன நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. "இந்த நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம் பெண்கள் எதிர் கொள்ளும் முக்கியமான சமுதாய பிரச்சனையை பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்த முடியும் என்பதை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்," என 'வீ வண்டர் வுமன்' அமைப்பின் நிர்வாக அறங்காவலரான சுபிதா ஜஸ்டின் கூறினார்.
இதையும் படிங்க:Call to Action Programme மூலம் தூய்மை நகரமாக மாறும் தலைநகரம்.. சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!