கோயம்புத்தூர்:பெரியநாயக்கன்பாளையம் பிரஸ்காலனியில் தம்பு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்த அபிநயா, 9ஆம் வகுப்பு படித்த ஹேமவர்சினி ஆகியோரை இன்று (ஜூலை 13) மாலை அவர்களது தாத்தா ராமசாமி தனது இருசக்கர வாகனத்தில் வீரபாண்டிபிரிவில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
குழந்தைகளை அழைத்துக்கொண்டு பள்ளியில் இருந்து 100 மீட்டர் தூரம் சென்ற நிலையில், கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்துடன் 3 பேரும் பேருந்தின் அடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்துள்ள 3 பேரும் கவலைக் கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மேல் சிகிச்சைகாக மூவரையும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே தாத்தா ராமசாமி மற்றும் பேத்தி அபிநயா ஆகியோர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஹேமவர்சினி உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுள்ளார். இதற்கிடையே இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர், தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி முன்பு மாணவர்கள் சாலையை கடக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் பள்ளி நிர்வாகம் சார்பில் செய்து தரப்படவில்லை எனவும் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அதி வேகமாக செல்லும் வாகனங்களால் தொடர்ந்து விபத்து ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தொழில் கூடங்கள், பள்ளிகள் முன்பு வேகமாக வரும் கனரக வாகனங்களின் வேகத்தை குறைக்க வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.