கோயம்புத்தூர்:திருச்சியை சேர்ந்தவர் அப்துல்ரசாக்(47). இவர் வெவ்வேறு நாடுகளில் இருந்து திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு தங்க நகைகளுடன் வரும் நபர்களிடம் நகையை வாங்கி அதனை குறிப்பிட்ட முகவரிக்குக் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் ரசாக்கை கடந்த 3ஆம்தேதி கோவை விமான நிலையம் அருகே வைத்து போலீஸ் சீருடை அணிந்த கும்பல் ஒன்று காரில் கடத்தி சென்றது.
சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த பயணி ஒருவரிடமிருந்து அவர் பெற்றதாக கூறப்படும் 500 கிராம் தங்க சங்கிலிகளை பறித்துக்கொண்ட அந்த கும்பல், ஈரோடு மாவட்டம் பவானி அருகே இறக்கிவிட்டு சென்றது.இது குறித்து இருதினங்கள் கழித்து அப்துல்ரசாக் பீளமேடு போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளைக் கும்பலை கைது செய்தனர்.
இது குறித்து காவல் உதவி ஆணையர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன்(28) சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது அண்ணன் தேவேந்திரன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். அவர், 500 கிராம் எடையுள்ள 6 தங்கச் சங்கிலிகளை பயணி ஒருவரிடம் கொடுத்து, திருச்சியைச் சேர்ந்த அப்துல் ரசாக்கிடம் என்பவரிடம் ஒப்படைக்க கூறி இருந்தார்.