கோயம்புத்தூர்: பொள்ளாச்சி தெற்கு ஆனைமலை வட்டத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர், மாக்கினாம்பட்டி, சோளபாளையம் ஊராட்சிகள் மற்றும் சமத்தூர் பேரூராட்சியில் நேற்று (ஜூலை 20) அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சாலை அமைக்கும் பணிகளுக்கு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டினார். பின்னர், சோளபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், கலைஞர் நூற்றாண்டு நினைவுப் பூங்கா ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், 134 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
கூடுதலாக, பொள்ளாச்சி தெற்கு வட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய்த்துறையின் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி தெற்கு வட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பில்சின்னம்பாளையம், ஜமீன்கோட்டம்பட்டி, குள்ளேகவுண்டனூர், பெத்தநாயக்கனூர், பழையூர், காசிபட்டினம் ஆகிய கிராம சாலைகள் ரூ. 3.34 கோடி மதிப்பீட்டில் 7 சாலைப்பணிகளையும், மக்கினாம்பட்டி ஊராட்சியில் ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் 3 பணிகளையும், சந்திராபுரத்தில் ரூ.33.85 லட்சம் மதிப்பில் ஒரு சாலைப்பணியினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.