கோவை மாவட்டம் மாங்கரை அடுத்த தூமனூர் பாதிரி மலை வனப்பகுதியில் யானை ஒன்று உயிரிழந்திருப்பதாக மாடு மேய்க்கச் சென்ற பழங்குடியின மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில், மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) குருசாமி தபேலா தலைமையில் மருத்துவர் சுகுமார், வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
அப்பொழுது உயிரிழந்திருப்பது 60 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது. இந்த யானை உயிரிழந்து சில நாட்களே ஆகியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "இதே பகுதியில் கடந்த 18ஆம் தேதி பிறந்து சில நாட்களே ஆன குட்டி யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே இடத்திற்கு அருகிலேயே இந்த யானை இறந்துள்ளதால், அந்த குட்டியின் தாயாக இது (யானை) இருக்கலாம். பிரசவத்தின் போது ஏற்பட்ட பிரச்னை காரணமாக யானை உயிரிழந்திருக்கலாம். இருப்பினும் யானையின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" எனக் கூறினர்.
பின்னர் யானையின் உடலானது உடற்கூறாய்வு செய்யப்பட்டு ஊன் உண்ணிகளுக்காக வனப்பகுதியிலேயே விடப்பட்டது. கோவை வனக் கோட்டத்தில் கடந்த எட்டு மாதங்களில் பல்வேறு காரணங்களால் 19 யானைகள் உயிரிழந்துள்ளது வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இறந்த குட்டி யானையுடன் பாசப்போராட்டம் நடத்தும் தாய் யானை!