கோயம்புத்தூர்: யானைகளில் இடப்பெயர்ச்சி காலமான செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் கேரளா முதல் கர்நாடகம் வரை யானைகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வலசை செல்லும் யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து விவசாயப் பயிர்களை சாப்பிடுவது வழக்கம்.
அதுமட்டுமின்றி ஒரே பகுதியில் இருக்கக்கூடிய யானைகள் வனத்தை விட்டு அருகிலுள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சாப்பிடவும், தண்ணீர் தொட்டிகளில் நீர் அருந்தவும் செய்கின்றன.
யானை விரட்டும் வாகனங்கள்
இதனையடுத்து அவ்வாறு ஊருக்குள் புகும் காட்டு யானைகளை விரட்டுவதற்கு அந்தந்த வனச்சரகங்களில் தனியாக யானை விரட்டும் வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இரவு நேரத்தில் ஊருக்குள் புகும் காட்டு யானைகளை வனப் பணியாளர்கள் விரட்டுவது வழக்கம்.
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகங்களிலும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக தனித்தனி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
யானை விரட்டும் பணியில் தொய்வு
இந்நிலையில் கோவை வனச்சரகம், பெரிய தடாகம், பன்னிமடை பகுதிகளில் யானை விரட்டுவதற்காக வழங்கப்பட்ட ஜீப்பின் முகப்பு விளக்குகள் சரிவர எரியாததால், மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஜீப்பின் ஒரு முகப்பு விளக்கு மட்டும் எரிவதால் யானைகளை விரட்டச் செல்லும் வனப் பணியாளர்கள் ஆபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுவதாக அப்பகுதி விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஒற்றை முகப்பு விளக்குடன் யானை விரட்டும் பணி...
விவசாய நிலத்துக்குள் யானைகள் புகுந்து விட்டதாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கும்போது அவர்கள் விரைவாக வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் ஒற்றை முகப்பு விளக்குடன் அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து சேருவதற்கு காலதாமதமாகிறது. மேலும் சைரன் ஒலி, பட்டாசு ஏதுமின்றி இந்த ஜீப்பில் யானையை விரட்ட முயற்சி செய்தால் அது பணியாளர்களுக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் உள்ளது.
எனவே யானைகளை விரட்டுவதற்கு ஏதுவாக வனப் பணியாளர்களுக்கு நல்ல முறையில் உள்ள வாகனங்களை போதுமான அளவு விரைந்து வழங்க வேண்டுமென தடாகம் பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:போதைப்பொருள் வழக்கு: ராணாவிடம் அமலாக்கத் துறை கிடுக்கிப்பிடி விசாரணை