கோவை: t23 புலி ஆட்கொல்லி புலி இல்லை என முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குநர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை கள இயக்குநர் அருண்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், t23 புலியை பின்தொடர்வது முதலில் சவாலாக இருந்தது. நேற்றிலிருந்து t23 புலியை பின் தொடர்கின்றோம், புதர் அதிகமாக இருப்பதால் அதை பிடிப்பதில் சிரமம் உள்ளது.
புலி இருக்கும் இடத்தை நான்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வன புதர்களில் அடிக்கடி பதுங்கிக்கொள்கிறது. புலியை பிடிக்கும் வியூகத்தை மாற்றி இருக்கின்றோம்.
4,5 இடங்களில் பரண் அமைத்து கண்காணித்து வருகிறோம். இன்று காலை முதல் பரண்களில் இருந்து மயக்க மருந்து செலுத்தி புலி பிடிக்கப்படும்,புலியின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. வனப்பகுதியில் எருமையை கொன்றது t23 புலியா என்பதை இன்றுதான் உறுதிப்படுத்த முடியும். 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது; கூடுதலாக 35 இடங்களில் கேமரா பொருத்தப்பட உள்ளது.