பொள்ளாச்சி :கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதியில் சுற்றித் திரிந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், பொது மக்களை அச்சுறுத்தியும் வந்த மக்னா யானையை கடந்த சில நாட்கள் முன் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். ஆனைமலை புலிகள் காப்பக டாப் சிலிப் பகுதியில் உள்ள யானை குந்தி வனப்பகுதியில் யானையை வனத்துறையினர் கொண்டு போய் விட்டனர்.
இந்த நிலையில் வனப்பகுதியை விட்டு யானை மீண்டும் வெளியேறி மதுக்கரைக்கு சென்றது. அதன்பின், மீண்டும் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்த வனத்துறையினர் ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியான மானாம்பள்ளி வனச்சரம் மந்திரி மட்டம் பகுதியில் விட்டனர்.
வனத்தை விட்டு மீண்டும் வெளியேறிய மக்னா யானை டாப்சிலிப் வழியாக பொள்ளாச்சி வனப்பகுதிக்குள் வலம் வருகிறது. தம்மம்பதி பகுதிகளில் உலா வரும் மக்னா யானை தனியார் தோட்டம் ஒன்றில் உலா வந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் 4 குழுக்களாக வனத்துறையினர் பிரிந்து யானையை கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கும்கி யானைகளான முத்து, சின்னத்தம்பி மற்றும் ராஜவர்தன் ஆகிய யானைகள் சரளபதி பகுதியில் மக்னாவை கட்டுப்படுத்த ஒரு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் சரளபதி அருகே உள்ள தனியார் மாந்தோப்பில் மக்னா யானை புகுந்தது.