தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காப்பீடும் இல்லை! அங்கீகாரமும் இல்லை! அவல நிலையில் வேட்டை தடுப்பு காவலர்கள் - Forest guards demand for job security

வனத்தின் உயிர் நாடியான வேட்டை தடுப்பு காவலர்களுக்கு முறையான சம்பளம், பணி பாதுகாப்பு இல்லை. உயிரை பணயம் வைத்து பணியாற்றும் அவர்களுக்கு காப்பீடோ, இழப்பீடோ இல்லை. வேட்டை தடுப்பு காவலர்களின் அவல நிலை குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு.

காப்பீடும் இல்லை! அங்கீகாரமும் இல்லை! அவல நிலையில் வேட்டை தடுப்பு காவலர்கள்
காப்பீடும் இல்லை! அங்கீகாரமும் இல்லை! அவல நிலையில் வேட்டை தடுப்பு காவலர்கள்

By

Published : Aug 6, 2022, 7:02 PM IST

கோவை:தமிழக வனத்துறையின் முதுகெலும்பாக உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்தையும் வன விலங்குகளையும் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றனர். வனப்பகுதிக்குள் ரோந்து செல்வது, வனக் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது, ஊருக்குள் புகும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதில் இவர்களின் பணி அளப்பரியது.

மேலும் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள முகாம்களில் தங்கி வேட்டை் தடுப்பு, உடல்நலம் பாதிக்கப்பட்ட வன உயிரினங்களை மீட்பது, கோடை காலங்களில் ஏற்படும் காட்டு தீ தடுப்பு பணிகளையும் வேட்டை தடுப்பு காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு என எந்தவொரு பணி பாதுகாப்பும் இல்லாத நிலையிலும் தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பணிநிரந்தரம் இன்னமும் எட்டாத கனியாகவே உள்ளது.

இவர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியமாக 12,500 வழங்கப்பட்டு வருகிறது. வேட்டை தடுப்பு காவலர்களை பொறுத்தவரை கடந்த 2010ம் ஆண்டிற்கு பின்னர் பணி நிரந்தரம் என்பதே இல்லை என்ற சூழல் காணப்படுகிறது. வனத்துறையில் காலியாக உள்ள வனக்காவலர் பணியிடங்கள் 10 ஆண்டுகள் பணி முடிந்த வேட்டை தடுப்பு காவலர்களை கொண்டு நிரப்பப்பட்டு வந்தது. ஆனால் அந்த முறையை அதிமுக ஆட்சிக்காலத்தில் மாற்றி நேரடி நியமனம் மூலமாக வனக்காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

காப்பீடும் இல்லை! அங்கீகாரமும் இல்லை! அவல நிலையில் வேட்டை தடுப்பு காவலர்கள்

இதனால் காட்டையே நம்பி வாழும் வேட்டை தடுப்பு காவலர்கள் தங்களை வனக்காவலர்களாக பணியமர்த்திட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். இதை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆண்டு பணி முடித்த வேட்டை தடுப்பு காவலர்கள் 243 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நிரந்தரம் செய்ய தகுதித் தேர்வு நடந்தது. ஆனால் 2 ஆண்டுகள் கடந்தும் மிகக் குறைவான வேட்டை தடுப்பு காவலர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

காப்பீடும் இல்லை! அங்கீகாரமும் இல்லை! அவல நிலையில் வேட்டை தடுப்பு காவலர்கள்

பெரும்பாலானோர் இன்னமும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை, இந்த சூழலில் ஆபத்தான பணியை மேற்கொண்டு வரும் வேட்டை தடுப்பு காவலர்கள் வன விலங்குகளால் பாதிக்கப்படும் போதும், விபத்துகளில் சிக்கும் பொழுதும் அவர்களுக்கு காப்பீடு ஏதும் இல்லாததால் பொருளாதார பின்னணியில் பெரும் சவால்களை சந்திக்கின்றனர். மிகக் குறைவான ஊதியம் பெறும் அவர்களின் குடும்பத்தினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

வனத்தையும் வன விலங்குகளையும் பாதுகாக்க 24 மணி நேரமும் அயராது உழைக்கும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பணி நிரந்தரம், காப்பீடு வசதி செய்து தர வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காப்பீடும் இல்லை! அங்கீகாரமும் இல்லை! அவல நிலையில் வேட்டை தடுப்பு காவலர்கள்

இது குறித்து கோயம்புத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் முருகானந்தம் கூறுகையில்,”வனத்தின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணிக்கு, வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின இளைஞர்களை தேர்வு செய்கின்றனர். இவர்களுக்கு வனப்பகுதியில் எந்த இடங்களில் எந்த விலங்குகள் இருக்கும் என்பது வனப்பகுதிக்குள் இருக்கும் அனைத்து இடங்களும் நன்கு பழக்கப்பட்டதால் இவர்கள் வனப்பகுதிக்குள் ரோந்து செல்வது எளிதாக இருக்கும்.

அதே சமயம் ரோந்து பணியின் போதும், ஊருக்குள் புகும் யானைகளை விரட்டும் போதும் அவ்வப்போது எதிர்பாராத விதமாக விபத்துகளில் சிக்குகின்றனர். அப்போது வன விலங்குகளால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகும் போதும் அல்லது உயிரிழப்பு ஏற்படும் சமயத்தில் அவர்களின் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய ஆபத்தான பணியை மேற்கொண்டு வரும் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படுவதில்லை, அதனை உடனடியாக வழங்க வேண்டும்.

அதே சமயம் வனத்தின் மீது அதிக அக்கறை உள்ள வேட்டை தடுப்பு காவலர்களை, வன காவலர்களாக தேர்வு செய்யும் பட்சத்தில் அவர்கள் வனத்தை காப்பதில் மேலும் அக்கறையுடன் செயல்படுவார்கள். தற்போது விபத்துகளில் பாதிக்கப்படும் வேட்டை தடுப்பு காவலர்கள் அவருடைய சொந்த பணத்தில் சிகிச்சை பெறும் சூழல் உள்ளதால் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி செய்து தர வேண்டும். வனவிலங்குகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும்.” என்றார்.

கோவை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2 வேட்டை தடுப்பு காவலர்கள் வன விலங்குகளின் தாக்குதல் மற்றும் பணியின் போது உயிரிழந்துள்ளனர். 4 பேர் வன விலங்குகளின் தாக்குதல் மற்றும் பணியின் போது படுகாயம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1 வேட்டை தடுப்பு காவலர் வன விலங்குகளின் தாக்குதல் பணியின் போது உயிரிழந்துள்ளார். 5 பேர் வன விலங்குகளின் தாக்குதல் பணியின் போது படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் கூறுகையில், ஆபத்தான பணியை மேற்கொள்ளும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்து கொடுக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அந்த பணிகள் முடிவடையும் என தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானை பிடிக்கும் பணி மற்றும் டி 23 புலியை பிடிக்க மிக முக்கிய பங்காற்றிய வேட்டை தடுப்பு காவலர்கள் மூன்று பேருக்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தியுள்ள நிலையில், எந்த ஒரு பணி பாதுகாப்பும் இல்லாமல் உயிருக்கு ஆபத்தான பணியை மேற்கொண்டு வரும் வேட்டை தடுப்பு காவலர்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:சர்வதேச புலிகள் தினம்: காட்டின் பாதுகாவலனை காத்திடுவோம்..

ABOUT THE AUTHOR

...view details