மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் போலுவம்பட்டி, மதுக்கரை, காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை உள்பட ஏழு வனச்சரகங்கள் அமைந்துள்ளன.
இதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், ஆகியவற்றின் பகுதிகளும் அடங்கும். இந்த வனப்பகுதியில் யானைகள், காட்டு மாடுகள், சிறுத்தைகள், புலிகள், கரடிகள், மான்கள், செந்நாய்கள், கழுதைப்புலிகள், பறவைகள், சிறு விலங்குகள் என ஏராளமான விலங்குகள் வசித்துவருகின்றன.
இங்குள்ள விலங்குகளையும், மரங்களையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கப் பல்வேறு முயற்சிகளை வனத் துறையினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எடுத்துவருகின்றனர்.
விலங்குகள் நடமாட்டம் கண்காணிப்பு
இதன் ஒரு பகுதியாக வனப்பகுதிகளில் விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க டிராப் கேமராக்கள் எனப்படும் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து, வனத் துறையினர் கண்காணித்துவருகின்றனர். இவ்வாறு அமைக்கப்பட்டிருந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை தற்போது வனத் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
யானைகள், புலிகள், உள்ளிட்ட விலங்குகள் கூட்டமாக வந்து நீர் அருந்திவிட்டுச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. அதேபோல் கருஞ்சிறுத்தை, கழுதைப் புலி உள்ளிட்ட ஊண் உண்ணிகளும் நடமாடிவருகின்றன.