தமிழ்நாடு - கேரளா எல்லையான மாங்கரை, தடாகம் பகுதிகளில் நடமாடும் யானைகளை ட்ரோன் கேமரா உதவியுடன் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கடந்த 7 மாதங்களில் மட்டும் 18 யானைகள் கோவை வனக்கோட்டத்தில் உயிரிழந்தன. இதையடுத்து யானைகளை பாதுகாக்கவும், உயிருக்கு போராடும் யானைகளை உடனடியாக கண்டறியவும், வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு தினங்களில் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
சிறுமுகை அடர் வனத்தில் யானைகள் வரிசையாக செல்வது, தண்ணீர் குடிப்பது போன்ற காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு மூலம் வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படும் யானைகளை கண்டறிந்து உடனடியாக மருத்துவம் செய்யவும், யானைகளின் உயிரிழப்பு தடுக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.