கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி முழுவதும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் 23ஆம் தேதி வரை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையும் இணைந்து, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டு, 23 சிறப்பு தனிக்குழுக்களாக சோதனை மேற்கொண்டனர்.
அதில், தற்போது வரை கள ஆய்வின்போது 108 பெட்டிக் கடைகளில், சுமார் 87.516 கிலோ தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளான பான் மசாலா மற்றும் குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்காவின் சந்தை மதிப்பு சுமார் 87 ஆயிரத்து 500 ரூபாய் என கூறப்படுகிறது.
மேலும், கள ஆய்வின் முடிவில் முதல் முறை குற்றம் புரிந்த 106 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையின் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான பான் மசாலா மற்றும் குட்கா ஆகியவற்றை விற்பனை செய்த 106 கடைகளுக்கு, முதல் முறை குற்றம் புரிந்ததற்கு அபராதமாக 5 ஆயிரம் வீதம் மொத்தம் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.