கோயம்புத்தூர்: மருதமலை அருகே உள்ள நவாவூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் நவாவூர் பிரிவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை வழங்கிய தடையில்லா சான்றிதழ் காலாவதியானதால் அதனை புதுப்பிக்க ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் வெங்கடேசனை அணுகியுள்ளார்.
அவர் தடையில்லா சான்றிதழ் புதுப்பிக்க 7000 ருபாய் லஞ்சம் வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த துரைசாமி அங்கிருந்து சென்ற நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி வெங்கடேசன் துரைசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு தடையில்லா சான்றிதழை உடனடியாக புதுபிக்குமாறு நெருக்கடி தந்துள்ளார்.
மேலும் தனக்கு பணம் தந்தால் உடனடியாக வேலை நடக்கும் இல்லை என்றால், தடையில்லா சான்றிதழ் இல்லாமல் கடை நடத்துவதாக கூறி கடைக்கு சீல் வைக்க நேரிடும் எனவும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து லஞ்சம் தர விருப்பம் இல்லாத துரைசாமி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் துரைசாமியை இன்று தொடர்புகொண்ட வெங்கடேசன் லஞ்ச பணத்தை இன்று ஆர்எஸ் புரம் பால் கம்பனியில் உள்ள தனது அலுவலகத்திற்கு கொண்டு வந்து தருமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் துரைசாமி தெரிவித்ததைவிட்டுு ரசாயனம் தடவிய பணத்தை துரைசாமியிடம் கொடுத்து வெங்கடேசனிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர். போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் துரைசாமி வெங்கடேசனின் அலுவலகத்திற்கு சென்று லஞ்ச பணம் 7000 ரூபாயை கொடுத்துள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உனவுத் துறை அதிகாரியை கையும் களவுமாக வெங்கடேசனை லஞ்ச பணத்துடன் கைது செய்தனர். தொடர்ந்து அவரை பந்தைய சாலையில் உள்ள உணவு பாதுகாப்பு துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில் வெங்கடேசனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.