கோயம்புத்தூர்:நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (53). இவர் சிறுமுகை பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது தங்கை பாக்கியா (45). இவர் சிறுமுகையில் அரசு மருத்துவமனை எதிரே புதிதாக வீடு வாங்கி உள்ளார். இந்த வீட்டிற்கு பால் காய்ச்சும் நிகழ்வில் பங்கேற்க, சிறுமுகைக்கு இவரது மருமகள் ஜமுனா (25), நண்பர்கள் நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கஸ்தூரி (30), சகுந்தலா (40) ஆகியோர் நேற்று (பிப் 11) சென்றுள்ளனர்.
அப்போது இவர்கள் 3 பேருடன் சேர்ந்து பாலகிருஷ்ணன் மற்றும் பாக்கியா சிறுமுகை வச்சினாம்பாளையம் பகுதியிலுள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். பில்லூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டதையொட்டி பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 5 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்த போலீசார் பாக்கியா (53), சகுந்தலா (40), ஜமுனா (30) ஆகியோரின் உடலை மீட்டனர். பாலகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிறுமுகை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.