கோயம்புத்தூர்: சிங்கப்பூரிலிருந்து கோயம்புத்தூருக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக கோவை விமான நிலைய வருவாய் புலனாய்வு அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில், நேற்று (அக் 4) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த ஆறு பயணிகளை சந்தேகத்தின் பேரில் வருவாய் புலனாய்வு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது தங்க செயின்கள் மற்றும் வளையல்களை பேண்ட் பாக்கெட்டுகளில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்களிடமிருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த முகமது அப்சல் (32) , ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கின்கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.