தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுகாதாரமற்ற முறையில் மீன் வளர்ப்பு - ஈ டிவி பாரத்தின் நேரடி கள ஆய்வு! - fish tank issue

கோவை: தொண்டாமுத்தூர் பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் மீன் வளர்ப்பு நடைபெறுகிறது. குறிப்பாக, உயிரிழந்த கோழிக் கழிவுகளை கொட்டி மீன்கள் வளர்க்கும் அதிர்ச்சியூட்டும் நேரடி கள ஆய்வு காட்சிகளை பிரத்யேகமாக எடுத்துள்ளது, உங்கள் ஈ டிவி பாரத் தமிழ்நாடு.

fish tank issue
fish tank issue

By

Published : Feb 7, 2020, 6:36 PM IST

Updated : Feb 7, 2020, 8:54 PM IST

உணவுப் பொருட்களில் பல்வேறு கலப்படங்கள் செய்வதால் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு வரும் சூழலில், கோவை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் அமைந்துள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட மீன் வளர்ப்புப் பண்ணைகளில் சுகாதாரமற்ற முறையில் மீன்கள் வளர்க்கப்படுவதாகவும், இறைச்சிக் கடைகளில் சேகரிக்கப்பட்ட கோழிக்கழிவுகள் மீன்களுக்கு உணவாக கொடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகின.

இதனையடுத்து நமது ஈ டிவி பாரத் தமிழ்நாடு நேரடி கள ஆய்வுக்குத் தயாராகி தொண்டாமுத்தூர், கெம்பனூர், நரசிபுரம் பகுதிகளில் உள்ள மீன் பண்ணைகளில் கள ஆய்வு மேற்கொண்டதில், கோவை மாநகராட்சி பகுதிகளில் இருந்து இறைச்சிக் கடைகளில் கோழிக் கழிவுகள் பெறப்பட்டு, இப்பகுதியில் உள்ள மீன் பண்ணைகளில் உள்ள மீன்களுக்கு உணவாக கொடுக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

சுகாதாரமற்ற முறையில் மீன் வளர்ப்பு

மேலும் மீன் வளர்ப்புக் குட்டைகளில் அசுத்தமான நீரை வெளியேற்றாமல், ஒரே நீரில் தொடர்ச்சியாக மீன்கள் வளர்க்கப்படுவதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது தங்களுடைய பகுதிகளில் இதேபோன்று சுகாதாரமற்ற முறையில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருவதாகவும், இந்த மீன்கள் அனைத்தும் கோவை பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனர். மேலும் இங்கு வளர்க்கப்படும் (நெய் மீன்) மீன்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதால் பெரும்பாலானோர் தங்களுடைய குழந்தைகளுக்காக இவ்வகை மீன்களை வாங்கிச் செல்வதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் தெரிவித்தனர்.

சுகாதாரமற்ற முறையில் வளர்க்கப்பட்ட மீன்

இவ்வாறு சுகாதாரமற்ற முறையில் வளர்க்கப்படும் மீன்களைச் சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொது மருத்துவர் கிருபா சங்கர், 'தற்போது உள்ள சூழலில் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், ரசாயனம் கலந்த துரித உணவு வகைகள் மூலம் கேன்சர் வரையிலான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இவ்வாறு அசுத்தமான நீரில் வளர்க்கப்படும் மீன்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் எனவும் கோழிக்கழிவுகள் மீன்களுக்கு உணவாக கொடுக்கப்படுவதால் வைரஸ் மூலம் பல்வேறு நோய்களும் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும்' எச்சரித்தார்.

பொது மருத்துவர் கிருபா சங்கர்

இதுகுறித்து சுகாதாரத் துறை, கோவை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சுகாதாரமற்ற முறையில் வளர்க்கப்படும் மீன் பண்ணைகளை அழிக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட மீன் பண்ணை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் வனப்பகுதியை ஒட்டி சுகாதாரமற்ற முறையில் மீன் பண்ணைகள் அமைத்துள்ளதால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள் இந்த கோழிக் கழிவுகளை சாப்பிடுவதாகவும், இந்தப் பன்றிகள் மூலம் மற்ற வன விலங்குகளுக்கும் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாகவும், வன எல்லையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மீன் பண்ணைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: மாதத்திற்கு ஒன்றேமுக்கால் லட்சம் ரூபாய் வீணாக்கும் நீதிமன்றங்கள்

Last Updated : Feb 7, 2020, 8:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details