சென்னை:சென்னை ஐஐடியின் சான்சிபார் வளாகம் (www.iitm.ac.in/zanzibar), கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் சான்சிபார் தீவில் அமைய உள்ளது. இதன் மூலம் சர்வதேச வளாகம் ஒன்றைத் தொடங்கும் நாட்டின் முதல் ஐஐடி என்ற பெருமையையும் சென்னை ஐஐடி பெற்றுள்ளது. இந்த வளாகம் அமையவிருப்பதை ஒட்டி, இறுதிகட்ட நடைமுறையாக இந்தியா- தான்சானியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை ஐஐடியில் ஜூலை 2023-ல் தொடங்கவுள்ள பல்வேறு பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் தான்சானியா, சான்சிபாரைச் சேர்ந்த குடிமக்களுக்கு இந்திய அரசு ஏராளமான உதவித் தொகைகளை வழங்குகிறது.
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, "சான்சிபாரில் வளாகத்தை நிறுவியிருப்பது உண்மையிலேயே சென்னை ஐஐடியின் வரலாற்றில் மிகப்பெரிய மைல் கல்லாகும். இதன் மூலம், சான்சிபாரில் வருங்காலத்தில் உயர் கல்விக்கான முன்முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்க முடியும் என எதிர்பார்க்கிறோம்.
முதல் கல்வியாண்டான 2023-24ஆம் ஆண்டின் வகுப்புகள் அக்டோபரில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் நான்காண்டு இளங்கலை அறிவியல், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் இரண்டாண்டு முதுகலைத் தொழில்நுட்பம் ஆகிய இரு முழுநேர கல்வித் திட்டங்கள் இடம்பெறுகின்றன. இதில் 70 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்தப் படிப்பிற்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அர்த்தமுள்ள மற்றும் ஒருங்கிணைந்த கூட்டுப் பட்டப்படிப்புகளை ஏற்படுத்துவது, ஆசிரியர், மாணவர் இயக்கத்தை மேம்படுத்துவது போன்ற விரிவான செயல்திட்டங்களை நாங்கள் வகுத்திருக்கிறோம். வெளிநாட்டில் முழு அளவிலான இயற்பியல் வளாகம் ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருகிறோம். இந்த லட்சியங்கள் நனவாவதைக் காணும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.
புதிய கல்விக்கொள்கை 2020, இந்திய உயர்கல்வியை நாட்டிற்கு வெளியேயும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஊக்குவிக்கிறது. தான்சானிய அரசின் கல்வி அமைச்சகம் இது தொடர்பாக தமது விருப்பத்தையும் பேரார்வத்தையும் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்திடம் தெரிவித்திருந்தது. இரு தரப்பிலும் பல்வேறு பிரதிநிதிகள் குழுக்கள் பார்வையிட்ட பின், இதில் கூட்டுமுயற்சி சிறந்ததாகக் கண்டறியப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சென்னை ஐஐடி தனது முதலாவது சர்வதேச வளாகத்தை சான்சிபார்- தான்சானியாவில் தொடங்கத் தயார் நிலையில் உள்ளது. கற்பித்தல் நிபுணத்துவத்துவம், சென்னை ஐஐடியின் தர உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் ஆசிரியர்களின் எண்ணிக்கை இருக்குமே தவிர, மாணவர்களின் ஆசிரியர்- மாணவர் விகிதம் கணக்கில் கொள்ளப்படாது.