கோவை:திமுக சார்பில் கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக 19ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரான கல்பனா ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் மணிகாரம்பாளையம் பகுதி திமுக பொறுப்பாளராக உள்ளார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கல்பனா 10ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். ஆனந்தகுமார் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்.
கோவையின் முதல் பெண் வேட்பாளர்
இந்நிலையில், மேயராக நிறுத்தப்பட்டுள்ள கல்பனா, கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் வேட்பாளர் என்கிற பெருமையும், திமுகவின் கோவை மாநகராட்சிக்கான முதல் மேயர் வேட்பாளர் என்கிற பெருமையும் பெறுகிறார்.
கட்சியின் மாவட்டப் பொறுப்பில் உள்ள சிலர் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மேயர் பதவி வாங்கக் கடும் போட்டி போட்டாலும் அவர்கள் மீது புகார்களும், முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடன் தொடர்பு உள்ளிட்ட சர்ச்சைகளும் இருந்த நிலையில் கல்பனா மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர் கல்பனா, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் ஆவார்.