கோயம்புத்தூர்: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இன்று(அக்.2) மதியம் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் விடுதியின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி தடுப்பான்கள், தெர்மாகோல் போன்றவற்றில் தீப்பிடித்துக் கொண்டதால் உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்டனர்.
அதேசமயம் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவத்தொடங்கியது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் கட்டடத்தின் கீழ் பகுதியில் இந்தியன் வங்கி உள்ளது.
இன்று(அக் 2) காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிருஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
அந்தக் கட்டட அமைப்பு வணிக வளாகம் போல் உள்ளதால் கீழ்ப் பகுதியில் அதிக அளவில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
தீப்பிடித்த உடன் பெரும்பாலான வாகனங்களை பொதுமக்கள் மீட்டு விட்டனர். ஒரு சில வாகனங்கள் மட்டுமே முழுமையாக எரிந்து சாம்பலானது. உடனடியாக பொள்ளாச்சியில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
இந்தத் தீவிபத்து பெரும் உயிர்ச்சேதம் முற்றிலும் தவிர்க்கப் பட்டது ஒரு சிலருக்கு மட்டும் தீக்காயங்கள் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்சமயம் தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று காவல் துறையினரும், தீயணைப்பு வீரர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மலையேறி சென்று குரங்குகளுக்கு உணவளிக்கும் அரும்பணி!