கோயம்புத்தூர்:சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம், பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக 2017ஆம் ஆண்டு சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் உள்பட 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. ஒவ்வொரு நபருக்கும் 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையானது வழங்கப்பட்டது.
மேலும், 31 பேரில் 29 பேர் இந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்டனர். இருவர் தங்களது குற்றப்பத்திரிகையை சொந்த வாகனத்தில் எடுத்துச் சென்றனர். மற்ற 27 பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை எடுத்துச் செல்வதற்காக மினி லாரியை வாடகைக்கு பிடித்தனர். மினி லாரி நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகை லாரியில் மூட்டை மூட்டையாக ஏற்றப்பட்டு சேலம் கொண்டு செல்லப்பட்டது.
வழக்கு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த அரசு வழக்கறிஞர் முத்துவிஜயன்,“ 29 நபர்கள், இரண்டு நிறுவனங்கள் என 31 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் பக்கம் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.