கோவை: கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே மத்திய அரசுக்கு சொந்தமான சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி மையத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி, ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மையம் அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால், யானைகள், காட்டு மாடுகள் போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும்.
இந்நிலையில், நேற்று முன்தினம்(மே.16) இரவு, ராஜஸ்தானைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் விஷால் ஸ்ரீமல் என்பவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார். வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், மாலை மற்றும் இரவு நேரங்களில் மாணவர்கள் வெளியே நடமாடக் கூடாது என்று தாங்கள் அறிவுறுத்தியிருப்பதாகவும், மாணவர் அறையைவிட்டு வெளியே வந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மாணவர் விஷால் மரணத்திற்கு சலீம் அலி ஆராய்ச்சி மைய நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டி சக ஆராய்ச்சி மாணவர்கள் இன்று(மே.18) ஆராய்ச்சி மைய வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கருப்பு பேட்ச் அணிந்தபடி அமைதியான முறையில் சலீம் அலி சிலை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விஷால் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறி, மாணவர் விஷாலின் புகைப்படம் மற்றும் வாட்டர் கேனிற்கு மாலை அணிவித்திருந்தனர்.
இதையும் படிங்க: யானை தாக்கியதில் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்த ராஜஸ்தான் மாணவர் பலி!