கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று (பிப். 28) மனு ஒன்றை அளித்தார். அதில், 'உக்ரைனிலுள்ள எனது மகள் ஐஸ்வர்யா மற்றும் அவரது நண்பர்களை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செல்வராஜ் கூறுகையில், 'எனது மகள் ஐஸ்வர்யா உக்ரைனில் தெற்கு பகுதியிலுள்ள மெட்ரோ பிளாக்ஸி மருத்துவக் கல்லூரியில் 4ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
அந்தப்பகுதி உக்ரைன் தலைநகரில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நேற்று (பிப். 27) எனது மகளுடன் பேசும்போது குண்டு வெடித்தது. வசதி இல்லாததால் குறைந்த செலவில் படிக்க விருப்பப்பட்டு அங்கு படிக்க அனுப்பினோம்.
அங்குள்ளவர்கள் பத்திரமாக அழைத்து வர வேண்டும். அங்கிருந்து வருபவர்களுக்கு இங்கு மருத்துவம் படிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எனது மகள் 4ஆம் ஆண்டு முடித்துள்ளார். சிரமத்திற்கு இடையே படிக்க வைக்கிறோம். எனது மகளின் மருத்துவக் கனவை நினைவாக்க வேண்டும்’ என்றார்.