கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் என 6 ஊராட்சிகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3,850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் வாயிலாக சிட்கோ தொழில் பேட்டை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும் கோவை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்து அவர்கள் மனு அளித்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அன்னூரில் சிட்கோ அமைப்பதற்காக 3,731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தொழில் பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 'நமது நிலம் நமதே' என்ற பெயரில் குழு ஒன்றை தொடங்கி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.