நோயாளியுடன் ஆம்புலன்சில் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கோயம்புத்தூர்: பல்லடம் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்-திலகவதி(42) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். திலகவதி உடல்நிலை சரியில்லாமல், வீட்டினுள் படுத்த படுக்கையாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனை அடுத்து அவர் பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைகாக அதே நாளில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு சரியான சிகிச்சை கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே மீண்டும் கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் அந்த மருத்துவமனையில் திலகவதிக்கு மூளை அறுவை சிகிச்சை மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை செய்து, மூச்சு விடுவதற்கு தொண்டையில் ஓட்டைப் போட்டு டியூப் பொருத்தியுள்ளனர். இந்நிலையில் நீண்டநாள் படுக்கையில் இருந்ததால் திலகவதிக்கு படுக்கைப் புண் வந்து அவரால் எழுந்து நடக்க முடியாமல் போனது.
இதுவரை அவரது உறவினர்கள் மூலமாக, மருத்துமனையில் 20 லட்சம் ரூபாய் சிகிச்சைக்காக பணம் கட்டியுள்ளனர். அதன்பின்னர் 4.1.2023 அன்று மேலும் இரண்டரை லட்சம் கட்ட வேண்டும், இல்லையென்றால் மருத்துவமனையில் இருந்து உடனடியாக வெளியே செல்லுங்கள், கூறி திலகவதியின் கணவர் மீது பொய்யாக மோசடி புகார் அளித்து நிர்வாகம் மிரட்டியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து அவரது மகள் மற்றும் அவரது உறவினர்கள், திலகவதியை ஆம்புலன்ஸ் மூலமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து, இதில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பந்தயசாலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஜிப்மரில் சிகிச்சைக்கு அழைத்து செல்ல இருப்பதால், தனியார் மருத்துவமனையிடம் பணத்தை வாங்கி கொடுத்து மேல் சிகிச்சைக்கு உதவ வேண்டுமென குடும்பத்தினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Coimbatore Vizha 2023: கோவையில் செட்டிநாடு பாரம்பரிய திருவிழா!