தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரிந்த வெங்காய விலை..! அவதியில் விவசாயிகள்.. வழி காட்டுமா அரசு..

வெங்காயம் மிக குறைந்த விலையில் விற்பனையாவதால், விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாக மாறிவருகிறது. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவரிக்கிறது இத்தொகுப்பு.

small onion rate  famers troubles on small onion rate  onion rate  famers troubles  சரிந்த வெங்காய விலை  வெங்காய விலை  சின்ன வெங்காய விலை  விவசாயிகளின் அவதி  வெங்காய விலை குறைவால் விவசாயிகள் அவதி
சரிந்த வெங்காய விலை

By

Published : Apr 12, 2022, 10:47 AM IST

கோயம்புத்தூர்: இரண்டு கிலோ சின்ன வெங்காயம் ஒரு ரூபாய். அம்மா வாங்கலியா..? அய்யா வாங்கலயா..? இப்படி கூச்சலிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்பவர்கள் வியாபாரிகள் அல்ல விவசாயிகள்.

பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள், கிலோ 10 ரூபாய்க்கு கீழ் வெங்காயத்தை விற்பனை செய்து விரக்தியில் உள்ளனர். இதனை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வெங்காய சாகுபடி செய்துள்ள விவசாயிகளுடன் ஒன்று சேர்ந்து, இந்த விற்பனையை செய்து வருகின்றனர்.

அந்தோ பரிதாபம்:இது குறித்து நம்மிடம் பேசிய கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் துணை தலைவர் பெரியசாமி, "தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் அதிகப்படியாக சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் வாழ் நாள் 65 நாள் முதல் 70 நாள் வரை உள்ளது. 1 ஏக்கரில் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்ய 80,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.

குறிப்பாக பூச்சி மருந்துகள் விலை, கடந்த ஆறு மாத காலத்தில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. உரங்கள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. இது குறித்து அரசு கவனத்தில் கொள்ளவில்லை. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை கிலோ 10 ரூபாய் வந்துள்ளது. மருந்து மற்றும் உர விலையை தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும்.

போதுமான விலை கிடைக்காததால் உற்பத்தி செய்யக் கூடிய பொருள்களை விற்பனை செய்ய முடியவில்லை. வேளாண் விற்பனைத் துறை உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருள்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே, வருங்காலத்தில் விவசாயம் செய்ய முடியும், இளைஞர்களும் விவசாயத்தை தொடர முடியும்” என்ற தெரிவித்தார்.

விவசாயிகளின் வேதனை

இலங்கை நிலை தான்: இதனைத்தொடர்ந்து, வெங்காய விற்பனை செய்யும் விவசாயிகளின் நிலை குறித்து பெண் விவசாயி சுமித்ரா நம்மிடம் பகிர்ந்துள்ளார். அதாவது, “100 ரூபாய்க்கு 5 கிலோ வெங்காயம் விற்பதால், விவசாயிகள் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இவ்வளவு பணம் செலவு செய்து வெங்காயம் அறுவடை செய்த பின்னர், விற்பனை செய்யும் போது நியாமான விலை கிடைத்தால் மட்டுமே விவசாயத்தை செய்ய முடியும்.

விவசாயிகளுக்கு தரமான விலை கிடைக்க வேண்டும். அதுபோல் காய்கறிகள் கிலோ 25 ரூபாய்க்கு விற்க வேண்டும். உணவு பொருட்களின் விலை உயர்ந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்போது, காய் விலை குறைவாக இருக்கும்போது ஏன் பேச மறுக்கிறது.

காய்கறிகளை ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் படும் கஷ்டத்தை முதலமைச்சர் நேரில் பார்க்க வேண்டும். தற்போது உள்ள இளைஞர்கள், விலை இல்லாமல் விவசாயம் செய்தால், நஷ்டத்தை சந்திக்க வேண்டும் என்பதால் விவசாயம் செய்ய வர மறுக்கின்றனர்.

20 ஆண்டுகளாக விவசாயம் செய்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. அரிசி இல்லை என்றால் கல்லை மண்ணை மட்டுமே சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும். விவசாயத்திற்கு விளைபொருள் கிடைக்கவில்லை என்றால் இலங்கையில் தற்போது நிலவும் நிலைமை இங்கு ஏற்படும் விவசாயத்திற்கு வர ஆர்வம் காட்டமாட்டார்கள்.

இதே நிலை நீடித்தால் சாப்பாடு ஒரு பாக்கெட் 500 ரூபாய்க்கு விக்கும் சூழல் ஏற்படும் முன்னே, பாதிப்புகளை தடுக்க முன்கூட்டியே யோசிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

சரியான விலை:இவரைத் தொடர்ந்து விவசாயி ரவிக்குமார் கூறுகையில், “பல வருடங்களாக வெங்காய விவசாயம் செய்து வருகிறோம். தற்போது வெங்காயத்தின் விலை மோசமாக உள்ளது. 6 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வெங்காயம் நடவு செய்தால், 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இவ்வாறு பாதி மட்டும் கிடைத்தால் நில வாடகை எவ்வாறு கொடுப்பது. வங்கியில் வைக்கப்பட்டுள்ள நகை கடன்களையும், வங்கி கடன்களையும் எப்படி அடைப்பது.

இதே நிலை நீடித்தால் எப்படி விவசாயம் செய்வது என தெரியவில்லை. விவசாய பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்தால் ஓரளவு சமாளிக்க முடியும். விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதால் விவசாயத்தை விட்டு செல்லத் தொடங்கியுள்ளனர். உரத்தின் விலை அடிக்கடி ஏற்படுவதால் விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளது.

தாய், தந்தையர் விவசாயத்தில் படும் கஷ்டத்தைப் பார்த்துக் கொண்டு, அவர்களது குழந்தைகள் விவசாயம் செய்ய மறுக்கின்றன” என வருத்தத்தோடு தெரிவித்தார். விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதால், விவசாயத்தை விட்டு இளைஞர் சமுதாயம் நகர்ந்து செல்கின்றனர்.

விவசாய பொருள்களுக்கு அரசு சரியான விலை நிர்ணயம் செய்தால், இந்தச் சூழலை தடுக்க முடியும் என்கின்றனர், பொதுமக்கள். தமிழ்நாட்டில் பாதிப்பின்றி விவசாயம் தொடருமா..? அல்லது இலங்கையின் நிலை ஏற்படுமா..? அனைத்தும் அரசின் கையில் தான் இருக்கிறது.

இதையும் படிங்க: முருகனுக்கே விபூதியா? திருச்செந்தூர் கோயிலில் நடப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details