கோவை:இன்று நடந்த கார் வெடி விபத்து குறித்து டிஜிபி சைலேந்திரபாபு, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,’’இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிவிபத்தில் உயிரிழந்த நபர் ஜமேசா முபின் (25) என்பது தெரியவந்துள்ளது.
கார் வெடி விபத்தில் இறந்த ஜமேசா முபின் அவர் வந்த காரில் ஆணிகள், கோலிகுண்டு போன்றவை இருந்தது தடயவியல் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜமேசா முபின் வீட்டைச் சோதனையிட்டதில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்கத் தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இறந்தவர் மீது வேறு வழக்குகள் எதுவும் இல்லை. இறந்தவருடன் தொடர்பிலிருந்த நபர்களை விசாரித்து வருகின்றோம்.
குற்றவாளி யார் என்பதைத் 12 மணி நேரத்திலேயே தனிப்படை போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர். இந்த கார் 9 பேரிடம் கைமாறியுள்ளது. தொடர்ந்து இது குறித்து வேகமாக விசாரணை நடத்தி காரை யார் வாங்கினார் என்பது குறித்தும் சிலிண்டர் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் கண்டறிந்துள்ளோம்.
கோவை மாநகர காவல்துறை சிறப்பாக இந்த வழக்கைக் கையாண்டனர். அவர்களுக்கு வாழ்த்துகள். மேற்கு மண்டலத்திலிருந்து 6 தனிப்படையினர் இந்த வழக்கை விசாரித்து உதவியுள்ளனர். ஜமோசா முபினிடம் NIA ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர், ஆனால் அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் கிடையாது. போலீஸ் செக்போஸ்ட் அங்கு இருந்ததால் அவர் இறங்கி ஓடி இருக்கலாம். இன்னும் புலன் விசாரணை நடைபெறுகின்றது.
காரில் எங்கேயோ இந்த பொருட்களைக் கொண்டு சென்று இருக்கின்றார். வருங்காலத்தில் ஏதாவது திட்டமிட்டு இருக்கலாம். வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடிமருத்துகளைப் பார்க்கும் போது எதிர்காலத்திற்கான திட்டங்களாக இருக்கலாம், தற்கொலைப் படையாக இருக்க வாய்ப்பில்லை.
ஆணி, கோலிகுண்டு போன்ற பொருட்கள் வண்டியிலிருந்த போது சிலிண்டர் வெடித்துள்ளது. வெடிமருந்துகள் வீட்டில்தான் இருந்தது. இறந்தவர் இஞ்சினியரிங் படித்துள்ளார். வருங்கால திட்டம் என்ன என்பது தெரியவில்லை. சில ஆண்டுகளாக அவருடன் மொபைல் போனில் தொடர்பிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.
ஒவ்வொரு தனிப்படையும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். 12 மணி நேரத்தில் குறிப்பிட்ட நபரை கண்டறிந்துள்ளோம். இவர் எந்த அமைப்பிலும் உறுப்பினராக இருந்தாக தெரியவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இவர் வழக்குகள் இருக்கும் நபர்களோடு தொடர்பிலிருந்துள்ளார். அந்த நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த வழக்கில் நல்ல முன்னேற்றம் நடைபெற்று வருகின்றது. தமிழகம் முழுவதும் 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையிலும் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம். சந்தேக மரணம், வெடிமருந்து சட்டம் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி இதையும் படிங்க:கோவையில் கார் வெடித்த சம்பவம் - இறந்தவர் யார் என்று துப்புகிடைத்தது