பஸ் உரிமையாளர் விளக்கம் என்ன கோயம்புத்தூர்:கோவை மாநகரில் தனியார் பேருந்து ஓட்டுநராக வலம் வந்த இளம்பெண் ஷர்மிளா (23), சமூக வலைதளங்களில் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமடைந்தார். இவரது தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும், கடின உழைப்பையும் கண்டு வியப்படையாதவர்களே தமிழ்நாட்டில் கிடையாது எனலாம். இத்தகைய நிலையில், இன்று (ஜூன் 23) கனிமொழி எம்பி கோவையில் ஷர்மிளா ஓட்டிய பேருந்தில் பயணம் செய்தார்.
இதனைத்தொடர்ந்து, அவரை டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் வேகமாக செய்திகள் பரவின. இந்த நிலையில், இது குறித்து கோவையில் விவி பஸ் சர்வீஸ் உரிமையாளர், விவி பஸ் சர்வீஸ் மேனேஜர் ரகு, ஷர்மிளா ஓட்டி வந்த பேருந்தில் பயிற்சி நடத்துநராக பணியாற்றிய அன்னத்தாய் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர்.
கனிமொழி எம்பியின் பேருந்து பயணம்: பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா வேலையில் இருந்து நிறுத்தப்பட்டது குறித்து விவி பஸ் சர்வீஸ் உரிமையாளர் துரைக்கண்ணு இன்று (ஜூன் 23) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஷர்மிளா மற்றும் அவரது அப்பா இருவரும் வந்து கோபமாக பேசிவிட்டு நாங்கள் போகிறோம் எனக் கூறிவிட்டு சென்றதாகவும், அதுவரை எனக்கு என்ன விஷயம் என்றே தெரியாது என்றும் கூறினார். கனிமொழி வரும்போது இது குறித்து என்னிடம் முதலிலேயே தெரிவித்திருக்கலாமே? என்று தான் அவரிடம் நான் கூறியதாகவும், தற்போதும் ஷர்மிளா பணியில் தான் உள்ளதாகவும், அவர் தான் பாதியில் இறங்கி சென்றுவிட்டார் என்றும் தெரிவித்தார்.
தகவல் தெரிவிக்காதது ஏன்?: நான் அவரது தந்தையை இதுவரை பார்த்தது கூட இல்லையென்றும், அவரை இன்று தான் பார்த்தாகவும், ஷர்மிளா வேலைக்கு சேர்ந்த போதுதான் அவரை பார்த்ததாகவும், பிறகு இடையில் ஒரு முறை செய்தியாளர்கள் அவரைப் பேட்டி எடுக்கும்போதுதான் பார்த்ததாகவும் கூறினார். இதற்கு அடுத்தபடியாக, இன்றுதான் அவரை பார்ப்பதாகவும், கனிமொழி எம்பி வரும்போது முன்னாலேயே தெரிவித்து இருந்தால் இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்து இருக்காது என்றுதான் அவரிடம் கூறியதாகவும் இது குறித்து அவர் பேசினார். முன்னதாக, வானதி சீனிவாசன் வந்ததும் எனக்கு தெரியாது; இன்று கனிமொழி வந்ததும் எனக்கு தெரியாது' எனக் கூறினார்.
ஷர்மிளாக்கு தனது பாப்புலாரிட்டி குறித்து கவலையா?:மேலும், இந்த விவகாரம் குறித்து மேனேஜர் ரகு அளித்த பேட்டியில், 'மூன்று மாதமாக ஷர்மிளா பேருந்தை இயக்கி வருவதாகவும், வேலையில் எந்த பிரச்னையும் இல்லையென்றும், மூன்று மாதத்திற்கு முன்பு ஒரு பெண் நடத்துநர் அவர்களாகவே வந்து சேர்ந்ததாகவும் கூறினார். இதனிடையே, ஷர்மிளா தன்னிடம் எந்த பெண் ஓட்டுநரையும் தன்னுடன் பணியில் அமர்த்த வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் ஓட்டும் பேருந்தில் ஒரு பெண் நடத்துநரை பணியில் அமர்த்தியதாகவும், பெண் நடத்துநரை அமர்த்தினால் தனது பாப்புலாரிட்டி போய்விடும் என தன்னிடம் ஷர்மிளா பேசியதாகவும், இதற்கு அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அவரிடம் சொன்னதாகவும் கூறினார்.
விருட்டென்று விலகி சென்ற ஷர்மிளா:கடந்த வியாழக்கிழமை முதல் மூன்று நாட்கள் ஷர்மிளா வேலைக்கு வராத நிலையில், அவரிடம் இதற்கான காரணத்தை கேட்டபோது, பெண் நடத்துநரை வேலைக்கு எடுத்ததால், அவர் கடந்த வியாழக்கிழமை பணிக்கு வரவில்லை என மற்ற பணியாளர்கள் தன்னிடம் சொன்னதாகவும் அவர் தெரிவித்தார். இன்று கனிமொழி எம்பி வந்ததால் அவர் பணிக்கு வந்த நிலையில், அவர் இறங்கியவுடன் ஷர்மிளாவும் பேருந்திலிருந்து இறங்கிவிட்டதாகவும் அவர் விளக்கினார். ஷர்மிளாவின் புகழ் குறைந்து விடக்கூடாது என்பதால் பிரச்னை செய்வதாக தெரிவித்தார். மேலும், தான் வேறொரு ஓட்டுநரை அனுப்பி பேருந்து சோமனூர் போய்விட்டு திரும்பி வந்தபோது, ஷர்மிளா அதிலே ஏறி அலுவலகம் வந்ததோடு, 'நான் வேலைக்கு வரலை'-ன்னு சொல்லிட்டு போய்விட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் நாங்கள் வேலைக்கு வரவேண்டாம் என சொல்லவில்லை என்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு கொடுப்பது அவருக்கு பிடிக்கவில்லை' என்றும் அவர் விளக்கினார்.
டிக்கெட்டில் தொடங்கிய பஞ்சாயத்து:இந்த விவகாரம் குறித்து பேருந்தில் இருந்த பயிற்சி பெண் நடத்துநர் அன்னத்தாய் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'நான் பயிற்சி நடத்துனராக இருப்பதாகவும், இந்த நிலையில் இன்று கனிமொழி எம்பி பேருந்தில் வந்ததாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பயிற்சி நடத்துநராக உள்ள தான், டிக்கெட்டுக்கு பணம் கேட்டதாகவும், அப்போது ஷர்மிளா நீங்கள் ஒன்றும், காசு தர வேண்டாம் நான் எடுக்கிறேன்; எனது அப்பா தருவார் என்று கூறியதாக தெரிவித்தார்.
அப்போது கனிமொழி எம்பிக்கு எதற்கு செலவு வைக்க வேண்டும் என்று நினைத்த போதிலும், நமது கடமையை செய்ய வேண்டும் என்று எண்ணிய தான், அவரிடம் டிக்கெட்டுக்கு காசு கேட்டதாகவும், அப்போது கனிமொழி சிரித்துக்கொண்டே எனது உதவியாளர் தருவார் என்று கூறியதாக பேசினார். அப்போது இரண்டு நபர்கள் ரூ.120 கொடுத்துவிட்டு ஆறு டிக்கெட்டுகள் வாங்கியதாகவும், பிறகு பேருந்தில் கனிமொழியிடம் முதலமைச்சர் அப்பா நன்றாக உள்ளாரா? தனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்று பேசியதாக நலம் விசாரித்ததாகவும் கூறினார்.
எனக்கு வேலை செய்யப் பிடிக்கவில்லை:பின்னர், பணக்காரர்கள் மற்றும் குடும்ப பின்புலம் உள்ளவர்களால் மட்டுமே மக்கள் பணி செய்ய முடியுமா? கேள்வியெழுப்பியதற்கு கனிமொழி எம்பி, 'எல்லோராலும் மக்கள் பணி செய்ய முடியும் அதற்கு சான்றாகத்தான் ஷர்மிளா விளங்குகிறார்' என்று கூறினார். இதன்பிறகு கனிமொழி அவர்களும் ஷர்மிளாவும் இறங்கிவிட்டதாகவும், இதனைத்தொடர்ந்து வேறொரு ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாகவும் அவர் கூறினார். மேலும், பேருந்து சோமனூர் சென்று வந்த பிறகு மீண்டும் இறங்கிய இடத்திலேயே ஷர்மிளா ஏறியதோடு, திடீரென்று 'நான் பேருந்தில் இருந்து இறங்குகிறேன் எனக்கு வேலை செய்ய பிடிக்கவில்லை' என்று கத்தியதாகவும் கூறினார். உடனடியாக, நான் ஷர்மிளாவிடம் என்னால் தான் இறங்குகிறாயா? என்று அவரிடம் நானாக பலமுறை மன்னிப்பு கேட்ட நிலையில், அவர் உங்களுக்கும் எனக்கும் எந்தவித பேச்சும் கிடையாது என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
அப்போதும் கூட நான் அவரிடம், 'என்னால் நீங்கள் இறங்கினால் எனது வேலைதான் பறி போய்விடும்; எனவே, உங்களுடைய கண் பார்வையை மீறி இனி நான் எதுவும் செய்யமாட்டேன்' என்று கூறியதாக விவரித்தார். அப்போது ஷர்மிளா, என்னிடம் 'நீங்கள் சுயநலமாக பேசுகிறீர்களா?' உங்களுக்கு வேலை வேண்டும் என்பதற்காக நான் இறங்காமல் இருக்க வேண்டுமா? எனக்கு வேலை செய்ய பிடிக்கவில்லை; நான் அலுவலகத்தில் சென்று பேசிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டதாக' அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வைரல் பெண் டிரைவர் ஷர்மிளா பணி நீக்கம் - கனிமொழியுடன் சந்தித்த நிலையில் நடவடிக்கை