கோயம்புத்தூர்:நடனம் ஆடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு, விளையாடிக் கொண்டிருந்த மாணவி உயிரிழப்பு, நல்ல உடல் நலத்துடன் இருந்தவர் திடீரென ஹார்ட் அட்டாக்கினால் உயிரிழப்பு என இவை தற்போது அதிகமாக நாம் எதிர்கொள்ளும் செய்திகள். இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வயதானவர்களையே அதிகம் தாக்கும் என்ற கருத்தை சமீப காலமாக இவை பொய்யாக்கி வருகின்றன.
அதிலும், கரோனாவிற்குப் பிறகு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் இளம் வயதினர் அதிக அளவில் உயிரிழக்கின்றனர். அதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுவது உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதும், திடீரென அதிக வேலை செய்வதும் ஆகும். காலமாற்றத்தினால் உணவு பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றமும் நாம் அதிகளவில் இதய நோயாளியாக மாறுவதற்கு முக்கிய காரணாக அமைகிறது.
சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நமது உணவு பழக்க வழக்கத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகளும், எண்ணெய், உப்பு நிறைந்த உணவு வகைகளுமே அதிக அளவு உள்ளது. உடலின் எந்த பகுதியில் பிரச்னை ஏற்பட்டாலும் நாம் முன்கூட்டியே சுதாரித்து விட முடியும். ஆனால், உடலின் இயக்கத்திற்கு ஆதாரமாக விளங்கும் இதயத்தில் பிரச்சினை இருப்பதை நம்மால் எளிதில் உணர்ந்து விட முடிவதில்லை. சமீபத்தில் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதனாலே குறிப்பிட்ட காலத்தில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதற்கு மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், இதயத்தில் ஏற்படும் பல வகையான பிரச்சினைகளையும் நாம் ஹார்ட் அட்டாக் என்றுதான் கருதுகிறோம். ஆனால், மாரடைப்பு (heart attack) வேறு, இதய செயழிலப்பு (cardiac arrest) என்பது வேறு. இது குறித்து கோயம்புத்தூர் கேஜி கார்டியாக் பிசியோதெரபி கல்லூரி பேராசிரியர் சுகன்யா விவரித்துள்ளார்.
மாரடைப்பு (heart attack): மாரடைப்பு என்பது ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு காரணமாக இதயத்திற்கு ரத்தம் செல்லாமல் இதயத் தசைகள் செயலிழந்து விடுவது. முன்பெல்லாம் வயதானவர்கள்தான் மாரடைப்பினால் இறந்து விட்டார்கள் என்று கேள்விப்படுவோம். ஆனால், இன்று 25 வயது முதலே சிலர் மாரடைப்பினால் இறந்து விடுகிறார்கள்.
இதற்கு தூக்கமின்மை, மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புகை பிடித்தல், உடலில் சேரும் அதிக அளவு கொழுப்பு, மது அருந்துதல், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை போன்றவை காரணங்களாக கருதப்படுகிறது.