கோவை: பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது மகன் ராஜமாணிக்கம். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பழனியம்மாளுக்கு, கடந்த 1988ஆம் ஆண்டு அரசு சார்பில் 51 சென்ட் நிலம் வழங்கப்பட்டிருந்தது.
கடந்த 2011ஆம் ஆண்டு பழனியம்மாள் காலமானதையடுத்து, அரசு வழங்கிய நிலத்தை ராஜமாணிக்கம் பராமரித்து வந்தார்.
இந்நிலையில் இந்நிலத்தை கடந்த 2020ஆம் ஆண்டு இதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர், போலி ஆவணங்களைத் தயாரித்து, நல்லறம் முருகவேல் என்பவரிடம் 3 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜமாணிக்கம், நில விற்பனை எவ்வாறு நடைபெற்றுள்ளது என விசாரித்துள்ளார்.
அப்போது உயிரிழந்த பழனியம்மாளின் பெயரில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து, ராஜமாணிக்கத்திற்கு பவர் ஆப் அட்டார்னி கொடுத்ததாக மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கடந்த 7ஆம் தேதி மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் ராஜமாணிக்கம் புகாரளித்தார்.