கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்டம், வால் பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் வசிக்கும் பழங்குடியின தம்பதியினர் ராஜலட்சுமி - ஜெயபால். இவர்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகள் இன்றி கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில், ராஜலட்சுமி - ஜெயபால் தம்பதியினர் பழங்குடியின மக்களுக்கு வசிப்பதற்கு வீடு வேண்டும் என மாவட்ட ஆட்சியர், தாசில்தார், சார் ஆட்சியர் ஆகியோரிடம் முறைப்படி, மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், தர்ணா மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில், வனத்துறையினர் இவர்களை இந்த பகுதியை விட்டு காலி செய்யுமாறு கூறினர். ஆனால் காலி செய்யமால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அகிம்சை போராட்டத்தை கையில் எடுத்து தொடர்ந்து 3 வருடங்கள் அறவழிப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த தகவல் தமிழக முதலமைச்சருக்கு தெரிய வந்தது. அதன்பின், தமிழக முதலமைச்சரின் உத்தரவின் படி, கடந்த 2021 ஆம் ஆண்டு இப்பகுதி மக்களுக்கு தேவையான 12 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் காந்தியின் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி தம்பதியினர் வெற்றி பெற்றதால், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தம்பதியினரை 75வது குடியரசு தின விழாவில் பங்கேற்க பரிந்துரை செய்தார். அதன்படி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் ஒப்புதலோடு இந்த தம்பதியினர் 75வது குடியரசு தின விழாவில் பங்கேற்க டெல்லி செல்ல உள்ளனர்.
இதுகுறித்து ராஜலட்சுமி கூறுகையில், "எங்கள் கிராமத்து மக்கள் வசிக்கும் விதமாக, இடம் கேட்டு தர்ணா, உண்ணாவிரதம் எனப் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று, எங்களுக்கு தேவையான 12 ஏக்கர் நிலத்தை மீட்க மகாத்மா காந்தியின் அகிம்சை வழியில் போராடினோம். இதில், வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கு மலைவாழ் மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி” எனத் தெரிவித்தார்.
ராஜலட்சுமியின் கணவர் ஜெயபால் கூறுகையில், "கடந்த 2018ம் ஆண்டு முதல் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு வன உரிமையும் கேட்டு, எங்கள் பகுதி மக்களுக்கு இடம் வேண்டும் என மாவட்ட ஆட்சியர், பொள்ளாச்சி சார் ஆட்சியர், தாசில்தார் என பல அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2021 ஆம் ஆண்டு வரை மூன்று வருடங்கள் அகிம்சை வழியில் போராடி எனது மனைவிக்கு பக்கபலமாக இருந்து இடத்தை மீட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
உறவினர் அனீஸ் குமார் கூறுகையில், "கல்லார் செட்டில்மென்ட் பகுதியில் 25 குடும்பங்கள் வசித்து வருகிறது. மழைக் காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு, மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வந்தோம். தமிழக முதலமைச்சருக்கு எங்களது போராட்டம் தெரிந்தவுடன், மாவட்ட ஆட்சியர் மூலம் எங்களுக்கு இடம் கொடுக்கச் சொன்னார்கள். பின்னர், எங்களுக்கு இடம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. குறிப்பாக, ராஜலட்சுமி, ஜெயபால் ஆகிய இருவரையும் குடியரசுத் தலைவர் கௌரவப்படுத்துவது எங்கள் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என தெரிவித்தார்.
ராஜலட்சுமி மகன் தீபக் கூறுகையில், "தங்களது பெற்றோர் படிக்கவில்லை. மழைக்காலங்களில் மண்சரிவு மழை வெள்ளம் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்தோம். போராட்டத்தில் அகிம்சை வழியில் வெற்றி பெற்று தனது பெற்றோர் குடியரசுத் தலைவரைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க:3 ஆண்டுகளாக திறக்கப்படாத ரயில்வே கழிப்பறை; பாரமரிப்பது என்எல்சியா.. ரயில்வே நிர்வாகமா என போட்டி?