திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது -முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோயம்புத்தூர் :விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத திமுக அரசைக் கண்டித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய எஸ்.பி.வேலுமணி, ''முதலமைச்சர் ஸ்டாலின் விலைவாசி உயர்வைப் பற்றி கவலைப்படாதவராக உள்ளார். திமுக ஆட்சியில் காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
முதலமைச்சர் சென்ற கூட்டத்தில், பெங்களூருவில் பிரதமர் வேட்பாளர் யார் என சொல்லாமல் கூட்டம் போட்டுள்ளார்கள். இந்தியாவை மாற்றியமைக்க உள்ளதாக ஸ்டாலின் சொல்வது வேடிக்கையாக உள்ளது. முதலமைச்சர் காவிரி நதி நீர் பிரச்சனையை பேசினாரா? தமிழ்நாடு விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் ஆட்சி திமுக.
மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்து கொண்டு விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் நடித்துக் கொண்டுள்ளார். திமுக ஆட்சியில் ஒவ்வொரு மக்களும் கஷ்டப்படுகிறார்கள். டாஸ்மாக் பாரில் அரசிற்கு செலுத்த வேண்டிய வரியை கட்டவில்லை. அரசு கஜானாவிற்கு செல்வதை அவர்கள் கஜானாவில் நிறைத்து கொண்டுள்ளார்கள். பொன்முடி வீட்டில் ரெய்டு வந்ததும் திமுக கூட்டணி கட்சிகள் அறிக்கை விட்டுள்ளனர்.
இது தான் அடிமை, சிங்கம் போல எடப்பாடி பழனிசாமி உள்ளார். எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார். கொள்கை வேறு, கூட்டணி வேறு எனத் தெளிவாக எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளார். தமிழ்நாட்டு நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம். குடும்பத்திற்காக கூட்டணி அமைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள், இப்போது எங்கே ஓடி ஒளிந்து உள்ளார்கள் எனத் தெரியவில்லை. எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படுவது எடப்பாடி பழனிசாமி மட்டும் தான்.
தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்பத்திற்கும் வழங்கப்படும் எனக் கூறிவிட்டு, தற்போது ஏகப்பட்ட வரன்முறை விதித்துள்ளனர். இது தான் திமுக. எடப்பாடி பழனிசாமி தந்த திட்டங்களை தான் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறார்.
கோவை மாவட்டத்தை புறக்கணித்த திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள். எப்போது நாடாளுமன்றத் தேர்தல் வந்தாலும் 40 தொகுதிகளிலும், சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” எனத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, ''கையாலாகாத திமுக அரசு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்தும், அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வைக் குறைக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்தபோது கூட்டுறவு சங்கங்கள் மூலம் குறைந்த விலையில் கொடுத்தோம். அதுபோல இப்போது செய்யவில்லை. திமுக ஆட்சியில் காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. இதைப்பற்றி திமுக அரசு கவலைப்படவில்லை. திமுக ஆட்சியில் கோவைக்கு புதிய திட்டங்கள் வரவில்லை. கோவை மாவட்டம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையாவது விரைந்து முடிக்க வேண்டும். டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
அதிமுக ஆட்சியில் 20ஆயிரம் போராட்டங்கள் திமுக தூண்டுதலால் நடந்தது. அதிமுக ஆட்சியில் மத்திய அரசு எந்த விலை உயர்ந்தாலும் எடப்பாடி பழனிசாமி தட்டிக்கேட்டார். தக்காளி விலை உயர்விற்கு திமுக மத்திய அரசை குறை சொல்கிறது. ஆனால், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தாங்கள் கொண்டு வந்த திட்டம் என்கிறார்கள். திமுக ஆட்சி மோசமான விளம்பர ஆட்சி. விலைவாசி உயர்வை குறைக்க வேண்டிய பொறுப்பு திமுக அரசிற்கு உள்ளது. விலைவாசி உயர்வை குறைக்க முதலமைச்சர் எதுவும் செய்யவில்லை.
கழிவு பஞ்சு நூற்பாலைகள் 15-வது நாளாக வேலைநிறுத்தம் நடத்தி வருகின்றன. இதுவரை தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மதுவிலக்கு துறை அமைச்சர் நாங்கள் மதிக்கக் கூடிய அமைச்சர். குறிப்பாக, இந்த துறையை அவருக்கு கொடுத்துப் பேச வைக்கிறார்கள். ஆனாலும், அவரது பேச்சை ஏற்க முடியாது. காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என சொல்வதை ஏற்க முடியாது என அவர் கூறியது கண்டிக்கத்தக்கது'' எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியாக பாஜக தான் செயல்படுகிறது என அண்ணாமலை கருத்து குறித்த கேள்விக்கு, ''யார் எதிர்க்கட்சியாக செயல்படுகிறார் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சி வளர அப்படி பேசுவார்கள். மக்களுக்கு அதிக போராட்டம் நடத்தியது அதிமுக தான். திமுக கூட்டணி கட்சிகள் எங்கு இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவர்களைத் தேட வேண்டிய நிலை உள்ளது'' எனப் பேசினார்.
இதையும் படிங்க :Manipur violence: மணிப்பூர் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டுக்கே அவமானம் - பிரதமர் மோடி கண்டனம்!