கோவை:டிஐஜி தற்கொலை விவகாரத்தில், (DIG Vijayakumar IPS suicide) மருத்துவருக்கு சம்மன் அனுப்பாதது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் என்றும்; நாடாளுமன்றத் தேர்தலை மையமாக கொண்டே 'மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும், விலைவாசி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து நாளை அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு குடிப்பழக்கம் இல்லாததால் டாஸ்மாக் மதுபான விலை உயர்வு பற்றி தெரியாது என்றும் பேசியுள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (ஜூலை 19) கோவை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகதான் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை எனும் நிலையில் 25 இடங்களில் பாஜக போட்டி என சொல்லி வருவது குறித்த கேள்விக்கு, 'அது அக்கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்காக செய்வது' எனப் பதிலளித்தார். மது விலைகள் உயர்த்தப்பட்டது குறித்த கேள்விக்கு, 'குடிக்கிற பழக்கம் எனக்கு இல்லை. மதுபான விலை உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேட்க வேண்டும்’ என்றார். திமுக அரசு மட்டும் தான் ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு என்றும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதைப் பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது என்றும் விமர்சித்தார்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஆலடி அருணா, என்.கே.கே.பி.ராஜா போன்றோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறிய அவர், அதிமுகவில் அமைச்சர் ஒருவர் மீது புகார் வந்த பொழுதும் நீக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், இன்றைக்கு செந்தில் பாலாஜி, ஸ்டாலினை நிறைய கவனித்திருப்பதாகவும், ஆகவே அவர் ஏதாவது வாயைத் திறந்து சொல்லிவிடுவார் என பயந்து இரவோடு இரவாக அவரை சந்தித்து ஆறுதல் கூறுவதாகத் தெரிவித்துள்ளார். அதோடு ஆட்சி கவிழ்ந்து போய்விடுமோ என்று அச்சத்தில் சந்தித்துள்ளதாகவும்; இதுதான் உண்மை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதோடு, உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லையெனில், சாதாரண மக்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். டிஐஜி தற்கொலை விவகாரத்தில், மருத்துவருக்கு சம்மன் அனுப்பாதது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்.