எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு கோயம்புத்தூர்: சேலம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "சென்னையில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி அதிகனமழை பெய்தது.
வானிலை ஆய்வு மையம், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என ஒரு வாரத்திற்கு முன்பே தெரிவித்தது. ஆனால், திமுக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். பருவமழை வரும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், பாதிப்புகளைக் குறைத்திருக்கலாம்" என்றார்.
எண்ணூர் அமோனியா வாயுக்கசிவு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "தமிழக அரசின் மெத்தனப்போக்கே அமோனியா வாயுக்கசிவுக்கு காணம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் இதுபோன்ற சம்பவங்களை தடுத்திருக்கலாம்"
இதனை அடுத்து அதிமுக பாஜக உடன் தொடர்பில்தான் உள்ளது என ஆர்.எஸ்.பாரதி கூறியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஆர்.எஸ்.பாரதிக்காகவா அதிமுக கட்சி நடத்துகிறோம்? அதிமுகவிற்கு ஆர்.எஸ்.பாரதி ஒன்றும் பொதுச் செயலாளர் அல்ல. அவர் மிகப்பெரிய விஞ்ஞானி. நாங்கள் மக்கள் பிரச்னைகளைச் சுட்டிக் காட்டுகிறோம். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றதும் புலம்புகின்றனர். கூட்டணி என்பது அரசியல் சூழலுக்குத் தகுந்தபடிதான் அமையும்" என்று தெரிவித்தார்.
மேலும், வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு நிறைவுற்றது குறித்து கேட்டபோது, "ஒரு பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்தால் இப்படித்தான் இருக்கும். இதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்காதது, அரசினுடைய செயலிழந்த தன்மையைக் காட்டுகிறது" என பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஓபிஎஸ் சிறைக்குச் செல்ல தயாராகிவிட்டார். அவர் மீது பல வழக்குகள் உள்ளன. விரைவில் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு வரும். அந்த வழக்கில் தண்டனை கிடைக்கும். அவர் குடும்பம் அதிகமாக சொத்து சேர்த்துள்ளது. அது முதலமைச்சராக இருந்த எனக்குத் தெரியும். என் மீது பழி சுமத்தி, அவர் தப்பிக்கப் பார்க்கிறார். ஓபிஎஸ் திமுகவின் பி டீம், திமுகவினர் எவ்வளவு முயற்சி செய்தும் அதிமுகவை ஒழிக்க முடியவில்லை. ஓபிஎஸ், திமுக உடன் கூட்டணி சேர்ந்து பொய் சொல்லி ஏமாற்ற பார்க்கிறார்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:எண்ணூரில் அமோனியம் வாயு கசிவு: கோரமண்டல் தொழிற்சாலையை மூட தமிழக அரசு உத்தரவு!