தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுச்சூழல் இழப்பீடு: செங்கற்சூளைகளுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து! - செங்கற்சூளை இழப்பீடு

கோவை தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 185 செங்கற்சூளைகள் தலா 32 லட்ச ரூபாய் சுற்றுச்சூழல் இழப்பீடு செலுத்தும்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court
சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : May 3, 2023, 9:51 PM IST

கோவை:தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 185 செங்கற்சூளைகளை மூடும்படி கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி உத்தரவிட்டார். இது சம்பந்தமாக வெளியான செய்தியின் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மாவட்ட ஆட்சியர், மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழுவை நியமித்து சுற்றுச்சூழல் சேதத்தை மதிப்பிட உத்தரவிட்டது.

இந்தக் குழு தீர்ப்பாயத்தில் அறிக்கை அளித்ததன் அடிப்படையில், ஒவ்வொரு செங்கற்சூளையும் தலா 32 லட்ச ரூபாய் சுற்றுச்சூழல் இழப்பீடாக செலுத்த வேண்டுமென மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து செங்கற்சூளை உரிமையாளர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வேலுமணி, லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "சுற்றுச்சூழல் பாதிப்பை ஆய்வு செய்த கூட்டுக்குழுவின் அறிக்கையை செங்கற்சூளைகள் தரப்பிற்கு வழங்காதது இயற்கை நீதியை மீறிய செயல். இழப்பீட்டை நிர்ணயிக்க உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை. எனவே மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறோம்.

அதேசமயம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய நடைமுறையை பின்பற்றியும், கூட்டுக் குழுவின் அறிக்கையின் நகலை ஒவ்வொரு செங்கற்சூளை தரப்பிற்கும் வழங்கி, அவர்களின் விளக்கத்தைப் பெற்று, இழப்பீடு நிர்ணயிப்பது தொடர்பாக காரணங்களை கூறி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கோயில் திருவிழாக்களில் விபத்துகள் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடைமுறைகள் வகுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details