கோயம்புத்தூர்:கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை இன்று காலை முதல் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவையில் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களை குறிவைத்து சோதனையில் இறங்கும் அமலாக்கத்துறை. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் சட்ட விரோதமாக பணப் பரிமாற்றத்திற்கான ஆவணங்களை கைப்பற்றியதாகத் தெரிவித்த அமலாக்கத்துறை, அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
கடந்த ஜூன் 23ஆம் தேதி, கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று (ஆகஸ்ட் 2) திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திமுக வேடசந்தூர் ஒன்றியச் செயலாளர் வீரா.சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விடிய விடிய சுமார் 18 மணி நேரமாக சோதனை நடத்தினர்.
இந்நிலையில் கரூரில் இன்று (ஆகஸ்ட் 3) காலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் சண்முகம் என்பவரது வீடு மற்றும் கரூர் செங்குந்தபுரம் சாலையில் உள்ள சங்கரின் நிதி நிறுவன அலுவலகம், கரூர் சின்னாண்டங்கோயில் சாலையில் உள்ள தனலட்சுமி கிரானைட் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கியுள்ளனர்.
அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சாட்சியங்களை வலுப்படுத்துவதற்காக அவரின் சுற்றுவட்டாரங்களில் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளதாகத் தகவல் தெரிவித்து உள்ளது. அந்த வகையில், கோவை மற்றும் ராமநாதபுரம் மாவட்டப் பகுதியில் உள்ள டாஸ்மாக் சூப்பர்வைசர் முத்துபாலன் என்பவர், வீட்டிற்கு இன்று காலை கேரளப் பதிவு எண் கொண்ட வாகனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் சூப்பர்வைசர் முத்துபாலன், வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சோதனை நடைபெறும் டாஸ்மாக் சூப்பர்வைசர் முத்துபாலன் வீட்டின் முன்பாக, சுமார் 10க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய மத்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதேபோல கோவை - திருச்சி சாலையில் உள்ள நாடார் வீதியில் அருண் அசோசியேட் என்ற கட்டுமான நிறுவனத்திலும் கேரளா பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்தினர், கட்டி வரும் பங்களாவை இந்த அருண் அசோசியேட் நிறுவனமானது தற்போது கட்டி வருகின்றது.
இதன் அடிப்படையில் அருண் அசோசியேட் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் அருண் இல்லம் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் மொத்தம் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மற்றும் கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் நடத்தியது. அந்த சோதனையில் கைப்பற்றபட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க:மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்; இருவரின் வியூகம் என்ன..?