தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 15, 2019, 9:59 AM IST

ETV Bharat / state

சலாம்...கம்பீர நடை... களைகட்டும் யானைகள் புத்துணர்வு முகாம்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம் நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இருந்து லாரிகள் மூலம் யானைகள் வந்தடைந்தன.

யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம்
யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில், திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் புத்துணர்வு நலவாழ்வு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக் காட்டில் நான்கு ஆண்டுகளும், அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் ஏழு ஆண்டுகளும் மொத்தம் 11 ஆண்டுகள், இந்த முகாம் நடைபெற்றுள்ளது.

வழக்கம்போல் இந்த ஆண்டு 12ஆவது யானைகள் புத்துணர்வு முகாம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு, தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் பொதுப்பணித்துறை, வனத்துறைக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. முகாமில் சமையல் கூடம், உணவருந்தும் இடம், யானை பாகன்கள் தங்குமிடம், மருத்துவ முகாமிற்கான செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், யானைகள் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதை, யானைகளை குளிக்க வைப்பதற்காக குளியல் மேடை மற்றும் ஷவர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமைச் சுற்றிலும் சூரிய மின் வேலி, தொங்கும் மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம்

இதனை முன்னிட்டு நேற்று யானைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக முகாமுக்கு வந்துள்ளன. இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கண்டு ரசித்து வருகின்றனர்.

முகாமில் மொத்தம் 28 யானைகள் கலந்துகொண்டு புத்துணர்வு பெற உள்ளதாகவும், 48 நாட்கள் நடைபெறும் முகாமிற்கு ரூ.1 கோடியே 40 லட்சம் நிதியை அரசு ஒதுக்கி உள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கோத்தகிரி சாலையில் உலாவந்த காட்டுயானை - வாகன ஓட்டிகள் பீதி!

ABOUT THE AUTHOR

...view details