கோயம்புத்தூர்:தடாகம் அடுத்த தாளியூர் பகுதியைச் சேர்ந்தவர், பழனிச்சாமி. இவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் குமார் - தங்கமணி தம்பதியினர் 8 வயது மகனுடன் வசித்து வருகின்றனர். இவ்வீட்டிற்கு அருகே ராஜேஷ்வரி என்ற மூதாட்டியும் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று (ஜன.10) அதிகாலை பொன்னூத்து வனப்பகுதியில் இருந்து வெளியேறிய தாய் மற்றும் அதன் குட்டி யானை தாளியூர் கிராமத்துக்குள் புகுந்தது.
இதனைத் தொடர்ந்து, முதலாவதாக அப்பகுதியில் உள்ள நடராஜ் என்பவரது வீட்டிற்குள் புகுந்த யானைகள், உணவுப் பொருட்களை தேடியது. பின்னர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்ற நிலையில், வீட்டில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பி உள்ளனர். பின்னர், அங்கிருந்து வெளியேறிய யானைகள், அருகில் உள்ள பழனிச்சாமியின் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.
அங்கு, குமாரின் வீட்டுக் கதவை உடைக்க முயன்ற நிலையில், குமார் மற்றும் அவரது மனைவி கதவை உள்பக்கமாக இருந்து தாங்கி பிடித்துக் கொண்டு சத்தம் எழுப்பியுள்ளனர். ஆனாலும், யானை கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றுள்ளது. இதனால், குமார் தனது மனைவி, மகனை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள பழனிச்சாமி வீட்டிற்குள் சென்று உயிர் தப்பியுள்ளார். யானை கதவை உடைத்து தள்ளியதில் குமாருக்கு கையில் எலும்பு முறிவும், அவரது மனைவிக்கு காலில் காயமும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, தாய் யானை, அருகில் உள்ள மூதாட்டி ராஜேஸ்வரியின் வீட்டு கதவை உடைத்து, உள்ளே சென்று அங்கிருந்த அரிசியை சாப்பிட்டுள்ளது. மூதாட்டி வெளியே சென்றிருந்த நிலையில், அவர் உயிர் தப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து, குடியிருப்பு பகுதியில் யானை புகுந்தது குறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.