வால்பாறையைச் சுற்றியுள்ள தனியார் எஸ்டேட் பகுதிகளில், பகல் வேளைகளில் காட்டு யானைக்கூட்டம் வனத்தைவிட்டு வெளியேறி, தேயிலைத் தோட்டங்களில் உலா வருகிறது. மேலும் சின்கோனா, முடீஸ், நல்லமுடிப் பூஞ்சோலை, குரங்கு முடி, சோலையார் அணை, பழைய வால்பாறை, வறட்டுப்பாறை ஆகிய இடங்களில் முகாமிட்டு உள்ளதால் தேயிலை பறிக்கச்செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடன் பணிக்கு செல்கின்றனர்.
அதேபோல் கேரள எல்லைப்பகுதியான, மளுக்குப்பாறை வழியாக இடம்பெயர்ந்து வால்பாறை வந்த யானைக்கூட்டம், வறட்டுப்பாறை அரசுப்பள்ளி சத்துணவுக் கூடத்தை இடித்துத் தள்ளியது. இதையடுத்து, பொதுமக்கள் மாலை நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு, வேட்டைத் தடுப்புக் காவலர்கள் இரவு, பகலாக வாகன ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.