கோயம்புத்தூர்: சிறுமுகை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக 12 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
வனப்பகுதியில் இருந்து மாலை நேரத்தில் வெளியேறும் யானைகள் அருகிலுள்ள வாழை தோட்டங்களை சேதப்படுத்துவது, அங்குள்ள பவானி ஆற்று நீரில் குளித்து மகிழ்வதும் என குதுகலமாக திரிகின்றன. இந்த யானைகளின் நடமாட்டம் லிங்காபுரம் பகுதிகளில் காணப்படுகிறது.
இந்நிலையில் இன்று (அக்.8) காலை நீரில் விளையாடிக் கொண்டிருந்த யானைகள் திடீரென பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவரை நோக்கி வந்தன. அதைக் கவனித்த மீனவர் அங்கிருந்து வேகமாக பரிசிலை நகர்த்தும் காட்சிகளை அருகிலிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.
யானைகள் மீன் பிடிப்பவர்களை துரத்திய காட்சி இது குறித்து சிறுமுகை வனத்துறையினர் கூறுகையில், “விஸ்கோஸ் ஆலையில் முகாமிட்டுள்ள 12 யானைகள் மாலை நேரத்திலும், அதிகாலை நேரத்திலும் அங்கிருந்து வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகின்றன.
இதன் காரணமாக இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பொதுமக்கள் அவ்வழியாக செல்லும் போது மிகவும் கவனத்துடன் செல்லவேண்டும். யானை நடமாட்டம் உள்ள பகுதிக்கு அவசியமின்றி செல்ல வேண்டாம்.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உள்ளதால் யானைகள் வனப் பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் குறைந்தால் மட்டுமே யானைகள் வனப்பகுதிக்குள் செல்ல முடியும். எனவே மக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 27 புரோட்டா, 1 சிக்கன் ரைஸ் சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு!