கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் பவானி ஆற்றுப் படுகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்றது வருகிறது. இதில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் யானைகள் மற்றும் தனியார் மடங்களுக்கு சொந்தமான யானைகள் என 26 யானைகள் பங்கேற்றன.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை தாக்கியதாக பாகன்கள் ராஜா என்ற வினில்குமார், சிவபிரசாத் ஆகியோரை தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் மேலாண்மை பராமரிப்பு விதியின்கீழ் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர். பாகன் வினில் குமாரை இந்து அறநிலைத்துறை பணி இடைநீக்கம் செய்தது.
யானை ஜெயமால்யதாவை கவனிக்க ஆள்கள் இல்லாததால் மீண்டும் யானையை ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு கொண்டு செல்ல இந்து அறநிலையத் துறை அலுவலர்கள் உத்தரவிட்டனர். தொடர்ந்து, முகாமில் இருந்த யானை ஜெயமால்யதா அறநிலையத் துறை அலுவலர்கள், கால்நடை மருத்துவ குழுவினர் முன்னிலையில் லாரியில் ஏற்றி இன்று அதிகாலை (மார்ச்.4)அனுப்பி வைக்கப்பட்டது.
புத்துணர்வு முகாமில் யானைகள் கோயில்களில் ஒரே இடத்தில் இருப்பதால் யானைகள் மன உளைச்சலால் பாதிக்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்படும். இந்நிலையில் முகாம் தொடங்கிய சில வாரங்களிலேயே அதில் பங்கேற்ற யானை திரும்ப கொண்டு செல்லப்பட்டதும், யானையை பராமரிக்க யானைப்பாகன் இல்லாத காரணத்தினாலும் அந்த யானை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாகலாம் என விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:எம்எல்ஏக்களும் குற்றப் பின்னணியும் - கடந்த தேர்தல் ஒரு அலசல்!