2011ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் மூன்று ஆண் யானை, சிறுமுகை வனப்பகுதியில் ஒரு ஆண் யானை என மொத்தம் நான்கு யானைகள் அடையாளம் தெரியாத நபர்களால் வேட்டையாடப்பட்டு அவற்றின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன. அதே பாணியில், வருசநாடு வனப்பகுதியில் 3, சீகூர், வல்லக்கடவு ஆகிய பகுதிகளில் தலா ஒன்று என்ற கணக்கில் மூன்று யானைகள் கொன்று குவிக்கப்பட்டன.
சங்கிலி போல் தொடர்ந்த இந்தச் சம்பவங்கள் 2015ஆம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கியது. தந்தத்திற்காக யானைகளை வேட்டையாடி கொலை செய்யும் நபர்களைத் தேடி கண்டுபிடிப்பதில் வனத் துறையினருக்கு சவாலாகவே இருந்தது. இந்நிலையில், சீகூர் வனப்பகுதியில் யானைகளை வேட்டையாடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த குபேந்திரன், சிங்கம் ஆகிய இருவரையும் வனத் துறையினர் கைது செய்தனர்.
இந்தக் கூட்டத்தின் தலைவனான பாபுஜோஸ் தலைமறைவாக இருந்து வந்தார். இந்தச் சூழலில் சிறுமுகை வழக்கு விசாரணைக்காக மேட்டுப்பாளையம் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். இது குறித்து வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனத் துறையினர் நீதிமன்ற வளாகத்தில் மறைந்து நின்றனர்.
அப்போது டீ கடைக்கு வந்த பாபுஜோசுவை வனத் துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து வனத் துறையினர் பாபுஜோஸ் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவு9, 39, 52, 51 (1) சட்டப்படியும் தமிழ்நாடு வனச்சட்டம் 1882 பிரிவு 21 டி.எச்.(2) வனத்திற்குள் அத்துமீறி நுழைதல், வேட்டையாடுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட பாபுஜோஸ் மேட்டுப்பாளையம் ஜுடிசியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.