கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு யானை, புலி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இதில் அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் யானைகள் நீர் மற்றும் உணவு தேடி மலை அடிவாரப்பகுதிகளில் உள்ள தோட்டத்துக்குள் நுழைந்து விவசாயப் பயிர்களை தின்று நாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை நரசிபுரம் ஓடை காட்டில் உள்ள விவசாயி ஆறுச்சாமி என்பவரது தோட்டத்துக்குள் நுழைந்தது. தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளத்தை தின்று நாசம் செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆறுச்சாமி பாதுகாப்பிற்காக தோட்டத்தில் விடிய விடிய தீ மூட்டினார். பின்னர் யானை அங்கே விடியும் வரை நின்று கொண்டு இருந்தது. இது குறித்து அப்பகுதியினர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தோட்டத்தில் முகாமிட்டு இருந்த யானையைப் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.