கோவை மாவட்டம் மாங்கரை, கணவாய், தடாகம் ஆகிய பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. யானைகள் நாள்தோறும் உணவுக்காகவும் தண்ணீர் தேடியும் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகள், விளை நிலங்களுக்கு வருவது வழக்கம்.
அதன்படி, நேற்று தாய் யானையும் யானைக் கன்றும் தடாகம் பகுதியில் உள்ள பாலாஜி என்பவரது தோட்டத்துக்குள் புகுந்தன. அப்போது, அங்குள்ள வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை யானைக்கன்று சேதப்படுத்தியது. இதையடுத்து யானைக்கன்று வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றது. வீட்டில் இருந்தவர்கள் பதறிப்போய் பரணில் ஏறி உயிர் தப்பினர்.