கோயம்புத்தூர்:மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக ஆண் காட்டுயானை ஒன்று கூத்தாமண்டி வனப்பகுதியினை ஒட்டிய விளைநிலத்தின் அருகே சோர்வாகச் சுற்றி வருவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சிறுமுகை வனச்சரகர் செந்தில் குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அந்த யானையை தேடி வந்தனர். இந்த நிலையில் கூத்தாமண்டி வனப்பகுதியில் வரப்பள்ளம் என்ற இடத்தில் அக்குழு ரோந்து சென்ற போது அங்கு சோர்வாக சுற்றி வந்த அந்த காட்டுயானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கோவை மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் தினேஷ்குமார் மற்றும் வன கால்நடை மருத்துவர் சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து யானை உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், முதல் கட்ட விசாரணையில் யானை கடந்த ஒரு வாரமாக உடல்நிலைக் குறைவால் உடல் சோர்வு ஏற்பட்டு நடக்க முடியாமல் கூத்தாமண்டி வனப்பகுதியினை ஒட்டிய பகுதிகளில் சுற்றி வந்துள்ளது தெரியவந்தது. மேலும் இன்று (மே.12) யானையின் உடற்கூறாய்வுக்கு பின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருச்சூர் பூரம் விழாவில் யானை அட்டகாசம்!