கோயம்புத்தூர்: மாவுத்தம்பதி கிராமத்திற்கு அருகே மரத்தோட்டம் பகுதியில் கோவை, பாலக்காடு இடையேயான ரயில்வே தண்டவாளத்தின் ஏ பிரிவு உள்ளது. இந்த தண்டவாளத்தில் நேற்று (நவ.27) இரவு மங்களூரு-சென்னை அதிவேக ரயில் 3 யானைகள் மீது அதிவேகத்தில் மோதியது. இதில் 2 யானைகள் தூக்கி வீசப்பட்டதோடு, ஒரு யானை தண்டவாளத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் வரை இழுத்து செல்லப்பட்டது.
இந்த விபத்தில் 3 யானைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், யானையின் உடல்களை அப்புறப்படுத்தி, உடற்கூராய்வு மேற்கொண்டனர்.
இதில் உயிரிழந்தவை 25 மற்றும் 8 வயதுடைய 2 பெண் யானைகள் என்பதும், ஒரு தந்தம் இல்லாத 12 வயது மக்னா வகை ஆண் யானை என்பதும் தெரியவந்தது. மேலும் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் 3 மாத கரு இருந்ததும் தெரியவந்தது. கருவுற்ற யானையின் வயிற்றில் இருந்து யானை சிசு இறந்த நிலையில் மீட்கப்பட்டது.
யானைகள் உயிரிழப்பு
ரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து யானைகளின் உடல்களை ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்திய வனத்துறையினர், ரயில் எஞ்சினை விசாரணைக்காக போத்தனூர் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரயில் ஓட்டுநர் சுபையர் மற்றும் துணை ஓட்டுநர் அகில் ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானைகளின் உடல்களை உடற்கூராய்வு செய்வதற்கான பணிகளை பார்வையிட்ட மாவட்ட வன அலுவலர் அஷோக்குமார், வழக்கமாக பி லைன் வழியாக ரயில்கள் செல்லும் நிலையில், ஏன் இரவு வேளையில் ஏ லைன் இருப்பு பாதையில் மாற்றப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறார்.
யானை கருவுற்றிருந்தது உடற்கூராய்வில் கண்டுபிடிப்பு
நூறாண்டுக்கும் மேலாக இந்த ரயில் பாதை பயன்பாட்டில் இருந்தாலும், கடந்த 1978ஆம் ஆண்டு முதல் முறையாக யானை ஒன்று ரயிலில் அடிபட்டு இறந்தது. அதைத்தொடர்ந்து இந்த பாதையில் மட்டும் கடந்த 1978 முதல் 2021 வரை 28 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு இதே பாதையில் மதுக்கரை அருகே யானை கூட்டம் ஒன்றின் மீது ரயில் மோதியதில், ஒரு கர்ப்பிணி யானை உள்பட 3 யானைகள் உயிரிழந்தன.
இதே போல் கடந்த 2016-ம் ஆண்டு இதே மங்களூர் சென்னை ரயில் மோதியதில் ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு யானை ஒன்று ரயில் மோதி உயிரிழந்ததை அடுத்து, இரு மாநில வனத்துறையினரும் ரயில்வே துறையினருடன் கலந்தாலோசித்து, இந்தப்பாதையில் ரயில்களை 30 முதல் 40 கிலோமீட்டர்கள் வேகத்திற்குள் இயக்குவது என விதிமுறை வகுத்தனர். இருப்பினும் தொடரும் யானை மரணங்கள் வன உயிரின ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கண்காணிப்பு தீவிரப்படுத்த கோரிக்கை
அதே சமயம் யானை உயிரிழந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு, அவை பயிர்களை சேதப்படுத்துவதும் அதிகரித்து வருவதால், கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமைத்து, வனத்துறையினர் 24 மணி நேரம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் யானைகள் நடமாட்டம் தெரிந்தால், ரயில் ஓட்டுநர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கும் நடைமுறை இருப்பதால், கண்காணிப்பு கோபுரம் அமைக்க தேவையில்லை என மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த விபத்து காரணமாக மீண்டும் கண்காணிப்பு கோபுரம், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை; சிறைக்கைதி சாட்சியம்!